

முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ‘இசட்' பிளஸ் பிரிவின் படி பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இவருக்கு 146 பேர் 3 அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். தற்போது ஆந்திராவில் ஆட்சி மாறியதால், சந்திரபாபு நாயுடுவுக்கு படிப்படியாக பாதுகாப்பு குறைக்கப்பட்டு விட்டது.
தற்போது இவரது பாதுகாப்பு பிரிவில் வெறும் 67 பேர் மட்டுமே உள்ளனர். இதுகுறித்து அமராவதியில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆந்திர மாநிலத் தலைவர் கலா வெங்கட்ராவ் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
சந்திரபாபு நாயுடுவுக்கு நக்சல்கள், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளதால், அவருக்கு ‘இசட்' பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஏற்கனவே ஒருமுறை இவர் திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் நக்சல்களின் கண்ணி வெடி தாக்குதலுக்கு உள்ளானார். மேலும், சந்திரபாபு நாயுடுவுக்கு அரசியல் ரீதியாகவும் பல எதிரிகள் உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், அவருக்கான பாதுகாப்பு தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும், அவரது மகனும், மேலவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான லோகேஷின் பாதுகாப்பும் குறைக்கப்பட்டுள்ளது.
அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பை அரசு குறைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.