

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அவமதிக்க வேண்டும் என ராகுல் காந்தியோ அல்லது காங்கிரஸோ ஒருபோதும் எண்ணியது கிடையாது என அக்கட்சி விளக்கமளித்துள்ளது.
மத்திய திட்டக் குழுவின் தலைவராக இருந்த மான்டெக் சிங் அலுவாலியா அண்மையில் தாம் எழுதிய புத்தகம் ஒன்றை வெளியிட்டார். அதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், ராகுல் காந்திக்கும் இடையேயான நெருடலான தருணம் குறித்து அவர் எழுதியிருக்கிறார்.
அதாவது, அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களின் குற்ற விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நீர்த்து போகும் செய்யும் விதமாக அவசரச் சட்டம் ஒன்றை அப்போதைய காங்கிரஸ் அரசு 2013-ம் ஆண்டு பிறப்பித்தது.
அப்போது காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த ராகுல் காந்தி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவசர சட்டத்தின் நகலை கிழித்தெறிந்தார்.
அந்த சமயத்தில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்துள்ளார். அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக மன்மோகன் சிங்கிடம் தாம் கூறியதாக அலுவாலியா தனது புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார்.
மேலும், தமது சகோதரரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சஞ்சீவ் இதுதொடர்பாக எழுதியிருந்த கட்டுரையையும் மன்மோகனிடம் அலுவாலியா காண்பித்துள்ளார். அதனை படித்துவிட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்த அவர், "நான் ராஜினாமா செய்தால் சரியாக இருக்குமா?" எனக் கேட்டதாகவும், அதற்கு தான், அப்படி செய்ய வேண்டாம் எனக் கூறியதாவும் அலுவாலியா அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவல்கள், பெரும்பாலான ஊடகங்களில் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மன்மோகன் சிங்கை அவமதிக்கும் எண்ணம் காங்கிரஸுக்கோ, ராகுல் காந்திக்கோ ஒருபோதும் இருந்தது கிடையாது. மன்மோகன் சிங்கை தமது குருவாகவே ராகுல் கருதுகிறார். அரசியலில் குற்றவாளிகள் இருக்கக் கூடாது; பொது வாழ்க்கையில் தூய்மை பேணப்பட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ராகுல் காந்தி அவ்வாறு செய்தார். இவ்வாறு ரண்தீப் சுர்ஜேவாலா கூறினார்.