Published : 19 Feb 2020 07:05 AM
Last Updated : 19 Feb 2020 07:05 AM

கேரளாவின் காசர்கோடு அருகே தத்தெடுத்து வளர்த்த இந்து மகளுக்கு கோயிலில் திருமணம் செய்து வைத்த முஸ்லிம் தம்பதிகள்

தத்தெடுத்த இந்து மதத்தைச் சேர்ந்த மகளுக்கு கோயிலில் முஸ்லிம் தம்பதிகள் திருமணம் செய்து வைத்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு அருகே மேலப்பரம்பு கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா. அவரது மனைவி கதீஜா. இதே பகுதியில் அனாதையாகத் திரிந்த ஏழைச் சிறுமி ஒருவரை அப்துல்லா-கதீஜா தம்பதி தத்தெடுத்து வளர்த்தனர். அந்தச் சிறுமியின் பெயர் ராஜேஸ்வரி. அவருக்கு 10 வயதாக இருக்கும்போது தத்தெடுக்கப்பட்டார்.

ராஜேஸ்வரியின் பெற்றோர் காலமாகி விட்டதால் அவர் அப்பகுதியில் அநாதையாக விடப்பட்டார். அவரது உறவினர்களும் யாரென்றே தெரியவில்லை. இந்நிலையில் தங்களுக்கு மகள் இல்லாததால், ராஜேஸ்வரியை தத்தெடுத்து தனது 3 மகன்களுடன் தனது மகளைப் போலவே வளர்த்தார் அப்துல்லா. முஸ்லிம் வீட்டில் வளர்ந்தாலும் அவரை அப்துல்லா மதம் மாற்றவில்லை. இந்துப் பெண்ணாகவே வலம் வந்தார் ராஜேஸ்வரி.

தற்போது ராஜேஸ்வரிக்கு 22 வயதானதால் அவருக்கு வரன் தேட அப்துல்லா முனைந்தார். அப்போது கன்ஹன்காட் பகுதியிலுள்ள விஷ்ணு பிரசாத் என்பவரது ஜாதகம் வந்து சேர்ந்தது. இருவருக்கும் பொருத்தம் பார்த்த நிலையில் அது பொருந்திப் போகவே திருமணத்தை அப்துல்லா நிச்சயித்தார். ஆனால் இந்து முறைப்படித்தான் திருமணத்தை நடத்த வேண்டும் என்பதில் அப்துல்லா உறுதியாக இருந்தார். தனது மகளின் எண்ணத்தைப் பிரதிபலிப்பது போலவே அவர் நடக்க முனைந்தார்.

இந்நிலையில் இந்து மத முறைப்படி கேரளாவிலுள்ள பகவதி கோயிலில் ராஜேஸ்வரி, விஷ்ணுபிரசாத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் விமரிசையாக நடைபெற்றது. இந்து மக்களும், முஸ்லிம் மக்களும் ஒருங்கிணைந்து இந்தத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த திருமண ஜோடியின் புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது கேரளா முழுவதும் வைரலாகி வருகின்றன.

இதுகுறித்து அப்துல்லா கூறும்போது, “ராஜேஸ்வரிக்கு 10 வயதாக இருக்கும்போது அவளைத் தத்தெடுத்து எனது மகளாகவே வளர்த்தேன். மகன்கள் ஷமிம், நஜீப், ஷெரீப் ஆகியோருடன் அண்ணன்-தங்கையாக வளர்ந்தாள் ராஜேஸ்வரி. என்னை உப்பா (அப்பா) என்றுதான் அன்போடு அழைப்பாள். மகன்கள் மூவரும் துபாயில் உள்ளனர்.

திருமணத்தை இந்து முறைப்படி நடத்தவே திட்டமிட்டோம். அதன்படி திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. எங்களுக்கு மகள் இல்லாத குறையை தீர்த்து வைத்தாள் ராஜேஸ்வரி. தற்போது ராஜேஸ்வரி தனது மாமியார் வீட்டுக்குச் சென்றுவிட்டதால் மகளைப் பிரிந்து எனது மனைவி கதீஜா சோகமாக இருக்கிறார்.

மருமகன் விஷ்ணு பிரசாத், ஆய்வகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

திருமண செலவுகளை ராஜேஸ்வரியின் அண்ணன்கள் பார்த்துக் கொண்டனர். மேலும் அவளது திருமணத்துக்காக நாங்கள் சேர்த்து வைத்த பணத்தையும் கொடுத்தோம். திருமண நிகழ்ச்சியில் 84 வயதான எனது தாயார் சபியும்மாவும் கலந்துகொண்டு வாழ்த்தினார். மகன்களுக்கு விடுமுறை கிடைக்காததால் அவர்களால் திருமணத்துக்கு வரமுடியவில்லை. அவர்கள் விரைவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

எங்கள் வீட்டு செல்ல மகள் ராஜேஸ்வரி எப்போது வருவாள் என்று காத்துக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் பாசத்துடன் அப்துல்லா.

மதங்களைக் கடந்த பாசத்தின் வெளிப்பாடாக நடைபெற்ற இந்தத் திருமணம் கேரள மக்களிடையே மிகவும் நெகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x