Published : 19 Feb 2020 06:56 AM
Last Updated : 19 Feb 2020 06:56 AM

அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மும்பை குழு முதலிடம்

அமெரிக்க தொலைக்காட்சியின் பன்முகத் திறன் போட்டி நிகழ்ச்சியான ‘America's Got Talent' -ல் மும்பை தாராவியை சேர்ந்த நடனக் குழு முதல் பரிசை பெற்றுள்ளது. இறுதிச் சுற்று போட்டியில் ரஜினி காந்தின் ‘பேட்ட' திரைப்படத்தில் இடம் பெற்ற ‘மரண மாஸ்' பாடலுக்கு அவர்கள் நடனமாடி முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளனர்.

அமெரிக்காவில் மிகவும் பிரபலமான பன்முகத் திறன் போட்டி நிகழ்ச்சி ‘America's Got Talent' ஆகும். கடந்த 2006-ம் ஆண்டு முதல் என்பிசி தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. நடப்பு ஆண்டுக்கான போட்டியில் 40 குழுக்கள் பங்கேற்றன.

இதில் மும்பை தாராவியை சேர்ந்த ‘V.Unbeatable' என்ற நடனக் குழு பங்கேற்றது. இந்த குழுவில் 29 நடனக் கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர். பல்வேறு சுற்று போட்டிகளுக்குப் பிறகு 10 குழுக்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன. இதில் மும்பை தாராவி நடனக் குழுவும் ஒன்றாகும்.

ரஜினி காந்த் பாடல்

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இறுதிச் சுற்றில் 10 குழுக்களும் பங்கேற்றன. இதில் ரஜினி காந்தின் ‘பேட்ட' திரைப்படத்தில் அனிருத் இசையமைத்த ‘மரண மாஸ்' பாடலுக்கு மும்பை தாராவி குழு நடனமாடியது. இந்த நடன வீடியோ உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இந்நிலையில் போட்டியின் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. அனைவரும் எதிர்பார்த்தபடி மும்பை தாராவி நடன குழு முதல் பரிசை தட்டிச் சென்றது. அமெரிக்காவின் ஏரோபிக்ஸ் நடன தம்பதி டைஸ், மேரி ஆகியோர் 2-ம் பரிசையும், அமெரிக்காவை சேர்ந்த 11 வயது வயலின் இசைக் கலைஞர் பட்லர் 3-ம் பரிசையும், பிலிப்பைன்ஸை சேர்ந்த பாடகர் மெர்சிலிட்டோ போமோய் 4-ம் இடத்தையும், ரஷ்ய ஏரோபிக்ஸ் நடனக் குழு 5-ம் இடத்தையும் பிடித்தன.

ரூ.7 கோடி பரிசு

முதல் பரிசை பெற்ற மும்பை தாராவி குழு ரூ.7 கோடியே 14 லட்சம் பரிசுத் தொகையை வென்றது. மும்பையின் தாராவி பகுதி தமிழர்கள் அதிகம் வசிக்கும் குடிசைப் பகுதியாகும். இதன்காரணமாகவே அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் தாராவி குழுவினர் தமிழ் திரைப் பாடலை தேர்ந்தெடுத்து நடனமாடினர். இந்தப் பாடல் அவர்களுக்கு வெற்றியைத் தேடி தந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x