Last Updated : 18 Feb, 2020 06:40 PM

 

Published : 18 Feb 2020 06:40 PM
Last Updated : 18 Feb 2020 06:40 PM

முதலில் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள்; இப்போது ஏழ்மையை சுவருக்குப் பின்னால் மறைக்க முயற்சி: பாஜகவுக்கு காங்கிரஸ் கண்டனம்

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா : கோப்புப் படம்.

புதுடெல்லி

நாட்டு மக்களின் நுகர்வுப் பழக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துவிட்டதாக வந்த புள்ளிவிவரத்தை மறைப்பதற்குப் பதிலாக அதை வெளிப்படையாக அறிவித்து பிரச்சினைக்குத் தீர்வு காண முயல வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் 24-ம் தேதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். குஜராத்தின் அகமதாபாத்துக்கு அதிபர் ட்ரம்ப் வருகை தரும்போது, அங்குள்ள குடிசைப் பகுதிகள் கண்ணில் படக்கூடாது என்பதற்காக மாநில அரசு சுவர் கட்டுவதாகச் செய்திகள் வெளியாயின.

இதைக் காங்கிரஸ் கட்சி கடுமையாகச் சாடியுள்ளது. முதலில் பொருளாதாரப் புள்ளிவிவரங்களை மறைத்த மத்திய அரசு, இப்போது வறுமையை, ஏழ்மையை சுவருக்குப் பின்னால் மறைக்க முயல்கிறது என்று விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், " நாம் இந்தக் காலத்தில் வாழ்கிறோம். ஜிடிபி டன்களில் மதிப்பிடப்படுகிறது. குடிமக்களின் உரிமை வோல்டுகளில் அளக்கப்படுகிறது. தேசியவாதம் டெசிபல்களில் மதிப்பிடப்படுகிறது. ஏழ்மை சுவரிலும் உயரத்திலும், நீளத்திலும் இருக்கிறது. இதுதான் பாஜகவின் புதிய இந்தியா" என விமர்சித்துள்ளார்.

கவுரவ் வல்லபா : படம் | ஏஎன்ஐ.

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லபா நிருபர்களிடம் கூறுகையில், " ஒளிந்து கொள்வதும், மறைப்பதும் மத்திய அரசின் வழக்கமான விளையாட்டு. ஜிடிபி புள்ளிவிவரங்கள், பணவீக்கம், வேலையின்மை, மக்களின் நுகர்வு 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி ஆகிய புள்ளிவிவரங்களை மத்திய அரசு மறைத்து வருகிறது.

விவசாயிகள் தற்கொலை குறித்த புள்ளிவிவரங்களை மறைத்தது, வேலையின்மை புள்ளிவிவரங்கள், பண மதிப்பிழப்பின் உண்மை நிலவரங்கள், உண்மையான ஜிடிபி விவரங்கள் ஆகியவற்றை பாஜக அரசு மறைத்தது. ஏழ்மையை சுவருக்குப் பின் மறைக்க முயல்கிறது. இப்போது 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மக்களின் நுகர்வு பழக்கப் புள்ளிவிவரத்தையும் மறைக்க முயல்கிறது. சமூகத்தில் இருக்கும் பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கு எதிராகவும் போர் செய்கிறது மத்திய அரசு.

உற்பத்தியில் உள்ள 23 துறைகளில் 16 துறைகள் மோசமாக இருக்கின்றன. ஆனால், அவ்வாறு இல்லை எனத் தொடர்ந்து அரசு மறுத்து வருகிறது. புள்ளிவிவரங்களை மறைக்கக் கூடாது என்று அரசைத் தொடர்ந்து கேட்டு வருகிறோம். பொதுப்படையாக அறிவித்தால்தான் அதுகுறித்து ஆலோசித்துத் தீர்வு காண முடியும்.

குஜராத் மாதிரி வளர்ச்சி குறித்துப் பேசியவர்கள் எல்லாம் தற்போது வறுமையை சுவருக்குப் பின் மறைக்கிறார்கள். நோய்க்கு மருந்து கொடுக்கும்போது நோய் வந்துள்ளதை ஏற்க வேண்டும். ஆனால், பாஜக அரசு தோல்விகளை ஏற்க மறுக்கிறது'' என்று கவுரவ் வல்லபா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x