

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்திய தொழில்துறையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு கரோனா வைரஸ் (கோவிட்-19 )பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
சீனா மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கரோனா வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 98 பேர் பலியானதைத் தொடர்ந்து கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,868 ஆக அதிகரித்துள்ளது.
72,436 பேர் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12, 552 பேர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து திரும்பியுள்ளனர். சீனாவில் ஏற்பட்ட இந்த பாதிப்பால் அந்நாட்டில் பெருமளவு தொழில்துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவிலும் சீனாவை நம்பி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடைபெறும் தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பாதிப்பு குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
சீனாவில் ஏற்பட்டுள்ள கரோன வைரஸ் பாதிப்பால் சில ரசாயனங்கள், சூரிய ஒளித்தகடுகள், சில வகை மருந்துகள் அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. இதற்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.
இதனால் இந்தியாவில் சில இறக்குமதி பொருட்களின் விலை உயரும் என அச்சம் நிலவுகிறது. ஆனால் தேவையான மாற்று நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்திய தொழில்துறையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து மத்திய அரசு முழுமையாக ஆய்வு செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.