Last Updated : 18 Feb, 2020 05:44 PM

 

Published : 18 Feb 2020 05:44 PM
Last Updated : 18 Feb 2020 05:44 PM

பிரிட்டன் எம்.பி.க்கு விசா ரத்து அவசியமானதுதான்: காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கருத்து

பிரிட்டன் எம்.பி. டெபி ஆபிரஹாமின் விசாவை மத்திய அரசு ரத்து செய்தது அவசியமானது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் ம்னு சிங்வி தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர் எம்.பி. டெபி ஆபிரஹாம். இவர் ஜம்மு காஷ்மீரைப் பார்வையிடச் சென்ற இங்கிலாந்து எம்.பி.க்கள் குழுவுக்குத் தலைவராக இருந்தார். இந்தியா சார்பில் இ-பிசினஸ் விசா கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி முதல் 2020 அக்டோபர் 2-ம் தேதி வரை டெபி ஆபிரஹாமுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், துபாயிலிருந்து நேற்று காலை டெல்லி விமான நிலையத்தில் டெபி ஆபிரஹாம் வந்து இறங்கினார். அவரை வெளியே அனுப்ப, இந்தியக் குடியேற்ற அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர். டெபி ஆபிரஹாமின் விசா இந்திய அரசால் ரத்து செய்யப்பட்டுவிட்டதால் அவரால் இந்தியாவுக்குள் நுழைய முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். காஷ்மீர் விவகாரத்திலும், காஷ்மீருக்கான 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட விவகாரத்திலும் இந்தியாவுக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்ததால் அவருக்கு விசா ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரிட்டன் எம்.பி டெபி ஆபிரஹாம்

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, பிரிட்டன் எம்.பி.க்கு விசா ரத்து செய்தது சரியான முடிவு என்று தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறுகையில், "பிரிட்டன் எம்.பி. டெபி ஆபிரஹாமின் விசாவை ரத்து செய்தது அவசியமானதுதான். அவர் எம்.பி. மட்டும் அல்ல, பாகிஸ்தானுக்கு நன்கு அறிமுகமானவர், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் ஆதரவானவர். இந்திய இறையாண்மையைத் தகர்க்க மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியையும் முறியடிக்க வேண்டும்.

பிரிட்டன் எம்.பி.யை இந்தியாவை விட்டு அனுப்பியது சரியான முடிவுதான். இந்தியாவுக்கு வந்துவிட்டு பின்னர் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் செல்லத் திட்டமிட்டு இருந்தார்" எனத் தெரிவித்தார்.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான சசி தரூர் பிரிட்டன் எம்.பி.க்கு விசா ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x