

இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்ட காரணத்தினால், பிரிட்டன் எம்.பி. டெபி ஆபிரஹாமுக்கு இ-பிசினஸ் விசா ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டனின் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவர் எம்.பி. டெபி ஆபிரஹாம். ஜம்மு காஷ்மீரைப் பார்வையிடச் சென்ற இங்கிலாந்து எம்.பி.க்கள் குழுவுக்குத் தலைவராக இருந்தார். இவருக்கு இந்தியா சார்பில் இ-பிசினஸ் விசா கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி முதல் 2020 அக்டோபர் 2-ம் தேதி வரை வழங்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், துபாயிலிருந்து நேற்று காலை டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய டெபி ஆபிரஹாம் வெளியே செல்ல, இந்தியக் குடியேற்ற அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர். டெபி ஆபிரஹாமின் விசா இந்திய அரசால் ரத்து செய்யப்பட்டுவிட்டதால் அவரால் இந்தியாவுக்குள் நுழைய முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்தியாவில் உள்ள பிரிட்டன் தூதரகத்தின் உதவியுடன் டெபி ஆபிரஹாம் துபாய்க்குப் புறப்பட்டுச் சென்றார்.
இந்த சூழலில் பிரிட்டன் எம்.பி. ஆபிரஹாமுக்கு வழங்கப்பட்ட விசா ஏன் ரத்து செய்யப்பட்டது, அதற்கான காரணம் குறித்து மத்திய அரசு வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் எம்.பி. ஆபிரஹாம், இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் காஷ்மீர் சென்றபோது அதன் குழுவின் தலைவராக இருந்தார். அப்போது இந்தியாவின் நலன்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுள்ளார். காஷ்மீர் விவகாரத்திலும், காஷ்மீருக்கான 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்த விவகாரத்திலும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். அதனால், டெபி ஆபிரஹாமுக்கு வழங்கப்பட்டிருந்த விசாவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
ஒருவருக்கு விசா வழங்குவதும், விசாவை ரத்து செய்வதும் அந்தந்த நாடுகளின் இறையாண்மைக்கு உட்பட்ட விஷயம். இதில் யாரும் கேள்வி எழுப்ப முடியாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அதுமட்டுமல்லாமல் பிப்ரவரி 14-ம் தேதியே டெபி ஆபிரஹாமுக்கான விசாவை ரத்து செய்து முன் கூட்டியே மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்துவிட்டோம். முன்கூட்டியே இந்திய அரசு விசா ரத்து செய்த தகவலைக் கூறவில்லை என்று டெபி ஆபிரஹாம் கூறுவது தவறான தகவல் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசா ரத்து செய்யப்பட்டது குறித்து பிரிட்டன் எம்.பி. டெபி ஆபிரஹாம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "ஒரு நண்பரை மற்றொரு நண்பர் மரியாதைக்குரிய வகையில் விமர்சிக்கக் கூடாது. எனக்கு வேதனையாக இருக்கிறது. இது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அறிகுறியா? நான் இந்தியக் குடியேற்ற அதிகாரிகளிடம் எனது விசா, பாஸ்போர்ட், புகைப்படம் ஆகியவற்றை அளித்தேன். அவர்கள் பார்த்துவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டனர். 10 நிமிடங்கள் கழித்து அங்கு வந்த அந்த அதிகாரி என்னை மரியாதை றைவாகப் பேசினார்" எனத் தெரிவித்தார்.