Last Updated : 18 Feb, 2020 03:05 PM

 

Published : 18 Feb 2020 03:05 PM
Last Updated : 18 Feb 2020 03:05 PM

மூத்த அம்பேத்கரிய சிந்தனையாளர், கர்நாடகத் தமிழர் இயக்க முன்னோடி வேதகுமார் காலமானார்: பெங்களூருவில் உடல் அடக்கம்

'தமிழர் முழக்கம்' இதழின் ஆசிரியரும், மூத்த அம்பேத்கரிய சிந்தனையாளருமான வேதகுமார் (85) உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் (16-ம் தேதி) காலமானார். இதைத் தொடர்ந்து, அவரது உடல் பெங்களூருவில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேதகுமார் வேலை நிமித்தமாக 65 ஆண்டுகளுக்கு முன்னர் பெங்களூருவுக்கு இடம் பெயர்ந்தார். அங்குள்ள மைக்கோ நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் பாபாசாகேப் அம்பேத்கரின் செட்யூல்ட் காஸ்ட் ஃபெடரேஷன் அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்டார். இதனால் அம்பேத்கர், தந்தை சிவராஜ், அன்னை மீனாம்பாள், தளபதி கிருஷ்ணசாமி, கான்ஷிராம் உள்ளிட்ட தலைவர்களுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.

அம்பேத்கரின் மறைவுக்குப் பின் திமுகவில் இணைந்த வேதகுமார், பெங்களூருவில் நாடகங்களின் வாயிலாக அக்கட்சியின் கொள்கைகளைப் பரப்பினார். அண்ணா, நெடுஞ்செழியன், மதியழகன், மு.கருணாநிதி, சத்தியவாணி முத்து உள்ளிட்ட திமுக முன்னோடிகளின் தலைமையில் நாடகம் நடத்தி, கட்சிக்காக நிதி திரட்டிக் கொடுத்துள்ளார். தென்னவர் தோழமைக் கழகம், திருக்குறள் மன்றம் ஆகியவற்றின் வாயிலாக இரு நூலகங்களையும் நடத்தி வந்தார்.

பின்னர் மறைந்த தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்த வேதகுமார் 1980களில் திமுகவில் இருந்து விலகினார். பின்னர் அம்பேத்கர் சுயமரியாதை இயக்கம் தொடங்கி, 'ஆக்ஸ்' என்ற ஆங்கில மாத இதழை நடத்தினார். 1991-‍ல் காவிரி கலவரத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து கர்நாடக தமிழர் இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பின் வாயிலாக 'தமிழர் முழக்கம்' என்ற மாத இதழை ஆரம்பித்து, கர்நாடகத் தமிழர்களின் பிரச்சினைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார்.

முதுமையினால் உடல் நலிவுற்றபோதும் வேதகுமார் தொடர்ந்து தமிழா் உரிமை சார்ந்த போராட்டங்களில் ஆர்வமுடன் பங்கேற்றார். பெங்களூருவில் உள்ள இந்திரா நகரில் தனது மகள் செந்தாமரை செல்வியுடன் வசித்து வந்த வேதகுமார் 16-ம் தேதி மாலை திடீரென காலமானாா். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மனித உரிமைச் செயற்பாட்டாளர் ரூத் மனோரமா, கர்நாடக‌ கட்டிடத் தொழிலாளர் சங்கத் தலைவர் சாமி, கர்நாடக‌ திமுக அமைப்பாளர் ந.ராமசாமி, அதிமுக இணை செயலாளர் எஸ்.டி.குமார், பாவலர் மருது, தென்னிந்திய பவுத்த சங்க செயலாளர் துரை ராஜேந்திரன் உட்பட ஏராளமான தமிழ் அமைப்பினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து நேற்று பிற்பகல் வேதகுமாரின் உடல் அல்சூர் லட்சுமிபுரம் இடுகாட்டுக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பெங்களூரு தண்டுக்கிளை உலகத் தமிழ்க் கழகத் தலைவர் கி.சி.தென்னவன் தமிழ் முறைப்படி திருக்குறள் ஓதிய பின்னர், வேதகுமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அம்பேத்கரிய அமைப்பினரும், திராவிட இயக்கத்தினரும் கலந்துகொண்டன‌ர்.

கர்நாடகத் தமிழர் இயக்க முன்னோடியாக விளங்கிய வேதகுமாரின் மறைவு அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தவறவிடாதீர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x