

சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கில் தினசரி விசாரணை நேற்று தொடங்கியது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த 2018 செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 65 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை கடந்த நவம்பரில் விசாரித்த உச்ச நீதிமன்றம், பெரிய அமர்வுக்கு வழக்கை மாற்றியது. அதன்படி தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயில் மட்டுமன்றி மசூதிகளில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது, பார்சி பெண்கள் வேறு சமுதாய ஆண்களை திருமணம் செய்யும்போது அவர்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவது உட்பட பல்வேறு மத நடைமுறைகள் குறித்தும் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கு பிப்ரவரி 17-ம் தேதி முதல் நாள்தோறும் விசாரிக்கப்படும். 7 கேள்விகளின் அடிப்படையில் விசாரணை நடைபெறும் என்று கடந்த 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
அதன்படி சபரிமலை வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்குவது என்பது குறித்து தலைமை நீதிபதி பாப்டேவும் இதர நீதிபதிகளும் ஆலோசனை நடத்தினர். மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். பல்வேறு மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் பராசரன், கபில் சிபல், இந்திரா ஜெய்சிங், ராஜீவ் தவாண் உள்ளிட்டோர் ஆஜராகினர்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தை தொடங்கினார். அவர் கூறும்போது, "மக்களின் நம்பிக்கை, மத நடைமுறைகள் காலம் காலமாக பின்பற்றப்படுகிறது. அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று முந்தைய தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு விதமான உடை நடைமுறை உள்ளது. அவற்றை நான் பின்பற்றுகிறேன்" என்று தெரிவித்தார்.
தலைமை நீதிபதி பாப்டே கூறும்போது, "உடன்கட்டை ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் ஒழிக்கப்பட்டுள்ளன. இதுபோல மத நடைமுறைகளில் சீர்திருத்தம் மேற்கொள்வது அவசியம்" என்றார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.