

காதலில் விழமாட்டோம் என்று மகாராஷ்டிரா கல்லூரி ஒன்று மாணவிகளிடம் சத்தியப் பிரமாணம் வாங்கிய சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த, துணிச்சலுக்கு தேசிய விருதுபெற்ற, ஜென் சதாவர்தே, அந்தக் கல்லூரிமீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளங்களிலும் வைரலானது.
ஜென் சதாவர்தே என்ற இந்த 12 வயது சிறுமி, கடந்த 2018ம் ஆண்டு மும்பையின் பரேல் பகுதியில் உள்ள கிறிஸ்டல் டவர் என்ற அடுக்கு மாடிக் கட்டடத்தில் தீப்பிடித்தபோது தனது உயிரையும் பொருட்படுத்தாமல் எரியும் நெருப்புக்குள் சென்று 10 பேரைக் காப்பாற்றியவர்.
இன்று அவர் எழுப்பியுள்ள பிரச்சினை காதலர் தினத்தன்று அமராவதி பல்லைக்கழகக் கல்லூரியொன்றில் மாணவிகள் கட்டாயப்படுத்தட்ட சம்பவம் ஒன்றை பற்றியது. இச்சம்பவம் சமூக வலைதளங்களிலும் வைரலானது.
மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட வைரலான வீடியோ படம் | படம்: ட்விட்டர்
ஜென் சதாவர்தே, ஷாஹீன் பாக் ஆர்ப்பாட்டங்களில் ஒரு குழந்தை மரணம் குறித்த பிரச்சினையை எழுப்பி, உச்சநீதிமன்றம் தானாக எடுத்துக்கொண்ட வழக்குக்கும் காரணமானவர். இப்போது காதல் விவகாரத்தில் மாணவிகளை சத்தியப் பிரமாணம் செய்ய கட்டாயப்படுத்திய கல்லூரி மீது முதல்வர் உத்தவ் தாக்கரே, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் மகாராஷ்டிரா காவல்துறைத் தலைவர் ஆகியோரின் அவசரத் தலையீட்டை கோரி கடிதம் எழுதியுள்ளார்.
விதர்பா இளைஞர் நலச் சங்கத்தால் நடத்தப்படும் இந்த கல்லூரி, அமராவதி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இது 30 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் கல்வி அமைச்சர் பேராசிரியர் ராம் மேகே அவர்களால் நிறுவப்பட்டது.
இதுகுறித்து ஜென் சதாவர்தே இன்று ஐஏஎன்எஸிடம் கூறியதாவது:
காதலர் தினத்தில் (பிப்ரவரி 14) அன்று நாக்பூருக்கு அருகிலுள்ள அமராவதியில் உள்ள மஹிலா ஆர்ட்ஸ் அண்ட் காமர்ஸ் கல்லூரியின் நிர்வாகம் ‘காதலில் விழ மாட்டோம்’ என்று உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. இது சட்டவிரோதமானது ஆகும்.
சில உள்ளூர் அரசியல் ஆர்வலர்களின் தூண்டுதலின் பேரில் சத்தியப்பிரமாணத்தில் மாணவிகள் கைகளை உயர்த்தி, உறுதிமொழி அளித்துள்ளனர். இது அவர்களாக செய்யவில்லை. கட்டாயப்படுத்தப்பட்டு செய்தனர்.
உறுதிமொழி ஏற்பின்போது, ''காதல் விவகாரங்கள் மற்றும் காதல் திருமணங்களில் ஈடுபட மாட்டோம், வரதட்சணை கோரும் இளைஞர்களை நிராகரிப்போம், குடும்பத்தின் ஆலோசனையை கடைப்பிடித்து, அவர்கள் தேர்ந்தெடுத்த வரன்கள் மீது நம்பிக்கை வைத்திருப்போம். இவை அனைத்தும் ஒரு சமூக கடமை!'' என்று அரசியலமைப்புக்கு எதிரான வகையில் உறுதிமொழி ஏற்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது ஒரு குழப்பமான உறுதிமொழியும்கூட. அதேநேரம் அரசியலமைப்பிற்கு விரோதமானது, மேலும் பெண்கள் தங்கள் வாழ்க்கை தொடர்பான முடிவுகள் / தேர்வுகள் செய்யும் உரிமை பெற தகுதியானவர்கள் ஆவர்.
இப்பிரச்சினையில் மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, மத்திய அமைச்சர் ஸ்ருதி இரானி மற்றும் மகாராஷ்டிரா காவல்துறைத் தலைவர் ஆகியோர் அவசரமாகத் தலையிட வேண்டும்.
மனுஸ்மிருதியின் உத்வேகத்தில் உருவாக்கப்பட்ட இந்த சம்பவத்திற்கு காரணமான கல்லூரியின் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிவு 294 மற்றும் ஐ.டி.சட்டம் 67 யின் கீழ் பாலின பாகுபாட்டை செய்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு ஜென் சதாவர்தே ஐஏஎன்எஸிடம் தெரிவித்தார்.
அமைச்சரின் வினோதமான பதில்
கல்லூரியில் உறுதிமொழி எடுக்கப்பட்ட சம்பவம் குறித்து பேசிய மகாராஷ்டிராவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் யஷோமதி தாக்கூர் வினோதமான பதில் ஒன்றை அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ''சத்தியப் பிரமாணம் யாரையும் கட்டுப்படுத்தாது என்றாலும் வர்தாவில் பெண் விரிவுரையாளர் ஒரு நபரைக் காதலித்து கைவிட்டதால் எரித்துக்கொல்லப்பட்ட சூழ்நிலையை பெண்கள் உணர வேண்டும்'' என்றார்.