Last Updated : 17 Feb, 2020 01:35 PM

 

Published : 17 Feb 2020 01:35 PM
Last Updated : 17 Feb 2020 01:35 PM

தேசத்துரோக வழக்கில் கைதாகி விடுவிக்கப்பட்ட காஷ்மீர் மாணவர்கள் 3 பேர் மீண்டும் கைது: எதிர்ப்பு வலுத்ததால் கர்நாடக போலீஸார் நடவடிக்கை

பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசி, தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட காஷ்மீர் மாணவர்கள் 3 பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. இதனையடுத்து அவர்களை ஹூப்பள்ளி போலீஸார் மீண்டும் இன்று கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம், ஹூப்பள்ளி நகரில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் மத்திய அரசின் இட ஒதுக்கீடு மூலம் காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த அமீர், பாசித், தலிப் ஆகிய 3 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

புல்வாமா தாக்குதல் நடந்த முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமையன்று கல்லூரி விடுதியில் இந்த 3 மாணவர்களும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். இது தொடர்பான வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலானது. இதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் பசவராஜ் அனாமி போலீஸில் புகார் அளித்தார்.

கல்லூரியில் மாணவர்களின் ஒற்றுமைக்கும், சமூக ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் பேசுகிறார்கள். இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் பேசுகின்றனர் எனப் புகாரில் தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸார் கல்லூரி விடுதிக்குச் சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தி சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
மாணவர்கள் மீது ஐபிசி 124 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது, கல்லூரி நிர்வாகமும் அந்த மாணவர்களை இடைநீக்கம் செய்தது.

மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின் சிஆர்பிசி 169 பிரிவின் கீழ் பத்திரத்தில் 3 மாணவர்களிடம் கையொப்பம் பெறப்பட்டது. இந்நிலையில் எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வர வேண்டும் எனும் நிபந்தனையுடன் நேற்று அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஆனால், மாணவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு இந்து அமைப்புகளும், மக்களும் கடுமையாக விமர்சித்தனர். போலீஸாரின் நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்து காவல் நிலையம் முன் நேற்று இரவிலும், இன்று காலை முதலும் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து, காஷ்மீர் மாணவர்கள் 3 பேரையும் போலீஸார் மீண்டும் கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து ஹூப்பள்ளி போலீஸ் ஆணையர் ராமஸ்வாமி திலீப் நிருபர்களிடம் கூறுகையில், "காஷ்மீர் மாணவர்கள் 3 பேரும் இன்று காலை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்" எனத் தெரிவித்தார்.

இந்த வழக்கு குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை போலீஸாருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அதற்குப் பிறகே அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x