

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தடுக்க மொபைல் போன், இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அங்கு இயல்பு நிலை திரும்பியதால் முதலில் தரைவழி தொலைபேசி சேவை தொடங்கப்பட்டது. அதன்பின் கடந்த 25-ம் தேதி முதல் மொபைல் போன் சேவை, இணைய சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. எனினும் சமூக வலைதளங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் அரசு நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தற்போது நடைமுறையில் இருக்கும் 2ஜி இணைய சேவை வரும் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. குறிப்பிட்ட 1,485 இணையதளங்களை பொதுமக்கள் பயன்படுத்தலாம். சமூக வலைதளங்கள், விபிஎன்சேவைக்கு அனுமதி இல்லை. இதேபோல 3ஜி, 4ஜி இணைய சேவை மீது விதிக்கப்பட்ட தடை தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜம்முவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதேபோல காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ளது. இவை தவிர ஜம்மு-காஷ்மீரில் புதிதாக 9 மருத்துவக் கல்லூரிகளை அமைக்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.