Last Updated : 16 Feb, 2020 06:47 PM

 

Published : 16 Feb 2020 06:47 PM
Last Updated : 16 Feb 2020 06:47 PM

''இருந்த இடத்திலிருந்தே வாக்களிக்கலாம்''- சென்னை ஐஐடியுடன் கரம்கோர்க்கும் தேர்தல் ஆணையம்

வாக்காளர்கள் தங்கள் தொகுதிகளில் ஊரில் உள்ள நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடிக்குச் செல்லாமல் தொலைதூர நகரங்களிலிருந்து வாக்களிக்க அனுமதிக்கக்கூடிய ஒரு புதிய தொழில்நுட்பத்தை வருங்காலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்காக சென்னை ஐஐடியுடன் கரம்கோர்த்துள்ளதாக மூத்த தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு முன்மாதிரியை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் தற்போது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கட்டத்தில் உள்ளது என்று மற்றொரு அதிகாரி கூறினார்.

தேர்தல்களின் போது வாக்களிப்பதைத் தவறவிடுகின்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பணியாளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்திக்கொள்வதற்காக வீடு செல்ல முடியாததால் தேர்தல் ஆணையம் அவர்களின் வாக்கையும் உறுதி செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சிகளிடமிருந்து கோரிக்கைகள் எழுந்ததையொட்டி இந்த முயற்சியை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இன்று மூத்த துணைத் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா புதிய திட்டத்தில் உருவாகிவரும் 'தொகுதி சங்கிலி' தொழில்நுட்பத்தை விளக்கி பிடிஐயிடம் கூறியதாவது:

இந்த நடைமுறை "இரு வழி மின்னணு வாக்குப்பதிவு முறையில் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இயக்கப்படும். அர்ப்பணிக்கப்பட்ட இணைய இணைப்புகளில் வெள்ளை பட்டியலிடப்பட்ட ஐபி சாதனங்களில், பயோமெட்ரிக் சாதனங்கள் மற்றும் வலை கேமரா மூலம் இது நடைமுறைப்படுத்தப்படும்.

எவ்வாறாயினும், இந்த வசதியைப் பயன்படுத்துவதற்கு வாக்காளர்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் நியமிக்கப்பட்ட இடத்தை அடைய வேண்டும். இது வீட்டிலிருந்து வாக்களிப்பது என்று அர்த்தமில்லை. இது "எந்த நேரத்திலும்-எந்த இடத்திலும்-எந்த சாதனமும்" என்ற தொழில்நுட்ப அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்க இன்னும் சிறிதுகாலம் தேவைப்படும்.

''இருவழித் தொகுதி சங்கிலி தொலைதூர வாக்களிப்பு" செயல்முறையானது வாக்காளர்களை அடையாளம் காணுதல் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றை உள்ளடக்கியது, இது தேர்தல் ஆணையத்தின் மின்-ஆளுமை விருது வென்ற தேர்தல் பதிவு அலுவலர் வலையமைப்பில் ( Electoral Registration Officer Network - ERO Net) பணிபுரியும் பல அடுக்கு தகவல் தொழில்நுட்ப முறையில் பயோமெட்ரிக்ஸ் மற்றும் வலை கேமராக்களைப் பயன்படுத்தல் வழிகளில் செயல்படுத்துவது ஆகும்.

ஒரு வாக்காளரின் அடையாளம் கணினியால் நிறுவப்பட்ட பிறகு, ஒரு தொகுதி சங்கிலி இயக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட மின்-வாக்குச் சீட்டு (ஸ்மார்ட் ஒப்பந்தம்) உருவாக்கப்படும்.

வாக்களிக்கும் போது (ஸ்மார்ட் ஒப்பந்தம் செயல்படுத்தப்படுகிறது), வாக்குச்சீட்டு பாதுகாப்பாக குறியாக்கம் செய்யப்பட்டு ஒரு தொகுதி சங்கிலி ஹேஷ்டேக் (#) உருவாக்கப்படும். இந்த ஹேஸ்டேக் அறிவிப்பு இதில் சம்பந்தப்பட்ட - வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களுக்கு அனுப்பப்படும்.

அவ்வாறு அனுப்பப்பட்ட ரகசியம் பாதுகாக்கப்படும் வகையிலான 'தொலைதூர வாக்குகள்' வாக்கு எண்ணும் முன் மீண்டும் சரிபார்க்கப்படும், அவை மறைகுறியாக்கப்படவில்லை, சேதமடையவில்லை அல்லது மாற்றப்படவில்லை என்பதை உறுதிசெய்கின்றன.

ஒரு மக்களவைத் தேர்தலின்போது, சென்னை வாக்காளர் ஒருவர் டெல்லியில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். தனது தொகுதியில் வாக்களிப்பதற்காக தனது தொகுதிக்கு திரும்புவதற்குப் பதிலாக அல்லது வாக்களிப்பதைத் தவறவிடுவதற்கு பதிலாக, வாக்காளர் தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட முன்னரே நிர்ணயிக்கப்பட்ட ஒரு இடத்தை உதாரணமாக கனாட் பிளேஸில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று ஒரு குறிப்பிட்ட நேர சாளரத்தில் வாக்களிக்க முடியும்.

அத்தகைய வாக்காளர்கள் இந்த விருப்பத்தை பயன்படுத்த அவர்கள் தங்கள் சொந்த தொகுதிகளில் தேர்தலை நடத்தும் ரிடர்னிங் ஆபீசர்களிடம்' முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.

இவ்வாறு தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

மற்றொரு உயர் தேர்தல் ஆணையர், ''தற்போது இது ஒரு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டம் மட்டுமே'' என்றார். தொழில்நுட்பம் சரியானதாகக் கண்டறியப்பட்டால், ஆலோசனைகள் மற்றும் தேர்தல் சட்டங்கள் மற்றும் விதிகளில் மாற்றங்கள் ஏற்பட்ட பின்னரே, அது உண்மையான சந்தர்ப்பங்களில் முயற்சிக்கப்படும்'' என்றார்.

முந்தைய மக்களவை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து. வெளிநாட்டு இந்தியர்களுக்கு ப்ராக்ஸி வாக்களிப்பை அனுமதிக்கும் மசோதா பாதியிலேயே நின்றது.

வெளி இடங்களில் பணிபுரிபவர்களுக்கு ஏதுவாக, சட்ட அமைச்சகம் சமீபத்தில் தேர்தல் விதிகளை மாற்றியமைத்தது, அதன்படி ஒரு வழி மின்னணு முறையில் அனுப்பப்பட்ட அஞ்சல் வாக்குச்சீட்டு முறைமை (Electronically Transmitted Postal Ballot System ஈடிபிபிஎஸ்) யில் இது அமைக்கப்பட்டது.

ஆயுதப் படைகள், மத்திய பாரா ராணுவப் படைகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மத்திய அரசு அதிகாரிகள் ஆகியோரைச் சேர்ந்த சேவை வாக்காளர்களின் தபால் வாக்குகளை மின்னணு முறையில் அவர்கள் வாக்குச் சீட்டுகளை நிரப்பி அஞ்சலில் சேர்த்த வாக்குகளை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

2019 மக்களவைத் தேர்தலின் போது, இவ்வகையிலான இடிபிபிஎஸ் அமைப்பு அத்தகைய சேவை வாக்காளர்களை வாக்கெடுப்புகளில் பெருமளவில் பங்கேற்க உதவியது, கிட்டத்தட்ட 62 சதவிகித வாக்களிப்புடன், இது முந்தைய இலக்கங்களில் மிகக் குறைவாக இருந்தது.

எனினும் இனி உருவாக்கப்பட உள்ள ''இருவழித் தொகுதி சங்கிலி தொலைதூர வாக்களிப்பு'' எனும் புதிய தொழில்நுட்ப முறையில் தொலைதூர வாக்காளர்கள் இன்னும் எளிமையாக வாக்களிக்க உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x