Last Updated : 16 Feb, 2020 04:38 PM

 

Published : 16 Feb 2020 04:38 PM
Last Updated : 16 Feb 2020 04:38 PM

அழுத்தங்கள் எவ்வளவு வந்தாலும் சிஏஏ- சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: பிரதமர் மோடி திட்டவட்டம்

வாரணாசியில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ

வாரணாசி

எவ்வளவு அழுத்தங்கள், நெருக்கடிகள் வந்தாலும், குடியுரிமைத் திருத்தச்சட்டம், ஜம்மு காஷ்மீருக்கான 370 பிரிவு சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றைத் திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார்

பிரதமர் மோடி, உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது தொகுதியான வாரணாசிக்கு 2 நாட்கள் பயணமாகச் சென்றுள்ளார். இந்த இரு நாட்கள் பயணத்தில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

இன்று நடந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ ஜகத்குரு விஸ்வர்தியா குருகுலத்தின் நூற்றாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்று 19 மொழிகளில் ஸ்ரீ சித்தாந்த சிகாமணி கிரந்தத்தையும்,மொபைல் ஆப்ஸையும் வெளியிட்டார்.

அதன்பின் வாரணாசி தொகுதியில் ரூ,1,254 கோடி மதிப்பிலான 50 வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.

வாரணாசியில் இருந்து மத்தியப்பிரதேசம் ஓம்கரேஷ்வர் வரை செல்லக்கூடிய மகா கால் எக்ஸ்பிரஸ் தனியார் ரயில் சேவையைப் பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

அதன்பின் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சிந்தனையாளர் பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள 63 அடி உயர சிலையைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அதன்பின் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

எவ்வளவு அழுத்தங்கள், நெருக்கடிகள் வந்தாலும், குடியுரிமைத் திருத்தச் சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 பிரிவு ரத்து ஆகியவற்றைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை.

நீண்டகாலமாக இந்த வரலாற்று முடிவுக்காக நாடு காத்திருந்தது. நாட்டின் நலனுக்காக இந்த முடிவுகள் மிகவும் அவசியமானவை. அனைத்து தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் வந்தாலும், எங்கள் முடிவிலிருந்து பின்வாங்கமாட்டோம்.

சில முக்கிய முடிவுகளை இந்த அரசு எடுத்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளையை அரசு உருவாக்கியுள்ளது. இந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டும் பணியைத் தீவிரமாக, வேகமாகச் செயல்படுத்தும்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x