

மகாராஷ்டிராவில் நம்பமுடியாத, இயற்கைக்கு மாறான கூட்டணி அமைந்து முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் அரசு அமைந்துள்ளது, மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துகிறது என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார்.
மும்பையின் புறநகரான நவி மும்பையில் பாஜகவின் இரு நாட்கள் மாநாடு இன்று தொடங்கியது. இதில் பாஜகவின் தேசியத் தலைவராகப் பொறுப்பேற்ற ஜே.பி. நட்டா முதல்முறையாகப் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த அக்டோபர் மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க மக்கள் வாக்களித்தார்கள். ஆனால், சில சுயநல நோக்கத்துடன் சிலர் நடந்து கொண்டு, எதிர்க்கட்சியினருடன் கூட்டணி சேர்ந்து ஆட்சிக்கு வந்துள்ளார்கள்.
மகாராஷ்டிராவில் அடுத்து நடக்கும் தேர்தலில் பாஜக யாருடனும் கூட்டணி அமைக்காது. தனித்துப்போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்கும். மகாராஷ்டிராவில் உள்ள அரசு இயற்கைக்கு மாறானது, நம்பமுடியாதது.
எதிர்காலத்தில் நாம் தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டு இருப்பதால், அதற்கு நம்மை நாம் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில் மாநிலத்தின் வளர்ச்சி சீராக இருந்தது, ஆனால் தற்போது மாநிலத்தின் வளர்ச்சிக்கு பிரேக் போடப்பட்டுள்ளது.
இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
மகாராஷ்டிராவில் சிவேசனா தலைமையில் காங்கிரஸ், என்சிபி கட்சிகள் கூட்டணி சேர்ந்து மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இருக்கிறார். தேர்தலுக்கு முன் பாஜகவுடன் கூட்டணி அமைத்த சிவேசனா முதல்வர் பதவியைப் பிரித்துக்கொள்வதில் ஏற்பட்ட பிரச்சினையில் இரு கட்சிகளும் பிரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.