

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மூலம் பிரதமர் மோடியும், உள்துறை அமித் ஷாவும் வெல்லமுடியாதவர்கள் அல்ல என்று உணர்த்தியுள்ளது என்று சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.
சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் டெல்லி தேர்தலில் பாஜக மதத்தை மையப்படுத்திச் செய்த பிரச்சாரத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளது. அதேசமயம், ஆம் ஆத்மி அரசு மக்களுக்கு செய்த மேம்பாட்டுப் பணிகளை வரவேற்றுள்ளது.
சாம்னா நாளேட்டின் ஆசிரியரும் சிவசேனா எம்.பியுமான சஞ்சய் ராவத் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது:
மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பாஜக வெல்ல முடியாத கட்சியாகத் தோற்றமளித்தது. ஆனால், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சீட்டுக்கட்டுபோல் சரிந்துவிட்டது.
எந்த நாடும் மதம் இல்லாமல் இல்லை. ஆனால், மதம் என்பது தேசியபக்தி அல்ல. கடவுள் அனுமரின் தீவிர பக்தரான கேஜ்ரிவால் ராம ராஜ்ஜியத்தைக் கொண்டுவந்துள்ளார். மக்கள் ராம்,ராம் என கூறிக்கொண்டு அனுமன் பக்தர் பின்னால் இருக்கிறார்கள். ஆனால், பாஜக தேர்தலில் கடவுள் ராமரைக் களத்தில் இறக்கியும் வெல்ல முடியவில்லை.
தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவுக்கு வாக்களிக்காத வாக்காளர்கள் துரோகிகள் என பாஜக தலைவர்கள் சிலர் தெரிவித்தார்கள். இப்போது டெல்லியில் தோல்வி அடைந்ததால், ஒட்டுமொத்த டெல்லி மக்கள் மீது தேசத்துரோகி முத்திரை குத்தப்போகிறார்களா.
டெல்லி தேர்தல் முடிவுகள் மூலம் பிரதமர் மோடியும், அமித் ஷாவும் நீண்டகாலத்துக்கு வெல்ல முடியாதவர்கள் அல்ல என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் நேர்மையற்றவர்கள் அல்ல. அரசியல் ஆதாயங்களுக்காக மதரீதியான வார்த்தைகள் பேசப்பட்டன, தூண்டப்பட்டன, ஆனால், மக்கள் அதைக் கருத்தில் கொள்ளவில்லை. மோடி, அமித் ஷா மட்டும்தான் தேர்தலில் வெல்ல முடியும் என்ற மூடநம்பிக்கையை மக்கள் கடந்து வந்துவிட்டார்கள்.
சமீபத்தில் உஸ்பெகிஸ்தான் தாஸ்கென்ட் விமானநிலையத்தில் நான் இருந்தபோது, அந்தநாட்டில் நீண்டகாலமாக வசிக்கும் இரு இந்தியர்கள் என்னிடம் பேசினார். அவர்கள், கூறுகையில், பாஜகவின் நீர்க்குமிழிகள் வெடிக்கத் தொடங்கிவட்டன. கடவுள் ராமர் தேர்தலில் வெற்றி பெற உதவ மாட்டார் என்று டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கையன்று என்னிடம் தெரிவித்தார்கள்
பிரதமர் மோடி, கேஜ்ரிவால் இருவரும் தங்களை மையப்படுத்திப் பேசுபவர்கள்தான். ஆனால், பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய அகங்காரம், பகட்டான பேச்சு இருக்கிறது.
கேஜ்ரிவால் இந்த நாட்டையே தேர்தல் மூலம் பிடிக்க வேண்டும் என்று ஒருமுறை எண்ணினார். ஆனால், மக்களவைத் தேர்தல் தோல்விக்குப்பின், தனது எல்லையைப் புரிந்துகொண்டு, தனது கட்சியை டெல்லிக்குள் வலுப்படுத்தியுள்ளார்
கேஜ்ரிவாலின் இலவசத் திட்டங்களான இலவச மின்சாரம்,குடிநீர் ஆகியவற்றை பாஜகவினர் விமர்சிக்கிறார்கள். பாஜகவின் தேசபக்தி என்பது, பாகிஸ்தானுக்கு எதிரான போர், 370 பிரிவை ரத்து செய்தது, ஊடுருவல்காரர்களுக்க எதிரான நடவடிக்கை, அடிக்கடி வந்தேமாதரம், பாரத் மாதா கி ஜே சொல்வதுதான்.
ஆனால் உண்மையான தேசபக்தி என்பது கேஜ்ரிவால் மக்களுக்கு அளித்ததைப் போல் தரமான கல்வி, மருத்துவ வசதி, மின்சாரம், குடிநீர், வீடு ஆகியவற்றை வழங்குவதுதான். கடந்த 2 ஆண்டுகளில் 2 கோடி பேர் விலை இழந்து விட்டநிலையில் இதை பாஜகவினர் தேசபக்தி எனக் கூறுவார்களா.
மக்களவைத் தேர்தலுக்கு முன் அனைத்து மக்களின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால், 15 ரூபாய் கூட டெபாசிட் செய்யவில்லை.
டெல்லி தேர்தலில் ராமர் கோயில், காஷ்மீர் விவகாரம், 370பிரிவு ரத்து, துல்லியத் தாக்குதல், இந்துத்துவா ஆகியவற்றை பாஜக கிளப்பியது. ஆனால், அத்தியாவசிய சேவைகளை வழங்கிய கேஜ்ரிவாலை மக்கள் தேர்வு செய்தார்கள்
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது