Last Updated : 16 Feb, 2020 12:34 PM

 

Published : 16 Feb 2020 12:34 PM
Last Updated : 16 Feb 2020 12:34 PM

மத்திய தேர்வாணய நேர்காணலுக்கு வரும் தமிழக மாணவர்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளுடன் இலவச பயிற்சி: டெல்லி தமிழ்நாடு இல்லம் ஏற்பாடு

தமிழ்நாட்டிலிருந்து மத்திய தேர்வாணைய நேர்காணலுக்கானத் தேர்வர்கள் டெல்லி வந்துள்ளனர். இவர்களுக்கு புதுடெல்லியின் தமிழ்நாடு இல்லத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மூலமாக பயிற்சி, ஆலோசனை மற்றும் தங்கும்வசதி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யுபிஎஸ்சி எனும் இந்திய குடிமைப்பணிகளுக்கான பிரதான தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மத்திய தேர்வாணையத்தின் நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் நேர்காணல் தேர்வுக்கு தமிழகத்தில் இருந்தும் மாணவர்கள் டெல்லி வந்துள்ளனர்.

இவ்வாறு ஆண்டுதோறும் புதுடெல்லி வரும் மாணவர்களுக்கு நேர்காணல் தேர்வுக்காக தமிழ்நாடு இல்லத்தில் சலுகை கட்டணத்தில் தங்கும் அறைகள் தமிழக அரசினால் வழங்கப்படுகிறது. தேர்வர்களுக்கு வாகனங்கள் உள்ளிட்ட வசதிகளும் தேர்வு நாளன்று இலவசமாக செய்து தரப்படுகிறது.

அம்மாணவர்களுக்கு தேவையான செய்திகளை தெரிந்துகொள்ள நாளிதழ்கள், வாரஇதழ்கள் மற்றும் இணையதள இணப்புடன் கணினி வசதிகளும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தவகையில் இந்த வருடத்திற்கான 200 தேர்வார்களுக்கும் இந்த வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

கூடுதலாக டெல்லியில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மூலமாக பயிற்சி நேர்காணல்(mock interview) மற்றும் ஆலோசனை வகுப்புகளும் நடத்தப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு சார்பாக தமிழ்நாடு அரசின் முதன்மை உள்ளுறை ஆணையாளர் (தமிழ்நாடு இல்லம்) திரு.ஹிதேஷ் குமார் எஸ் மக்வானா செய்துள்ளார். நேற்று மாலை அம்மாணவர்களுக்கு பயிற்சி நேர்காணலும் நடத்தப்பட்டது.

இதில் டெல்லியில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் குடிமைப்பணி மூத்த அதிகாரிகளான நெடுஞ்செழியன், அசோக் குமார், சிபி சக்கரவர்த்தி, எல்..ஸ்டிபன், ஜெயசுந்தர் மற்றும் ராகுல் குமார் ராகேஷ் ஆகியோர் வருகை புரிந்து பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x