

ஊட்டச்சத்து குறைபாடு, தண்ணீர் பற்றாக்குறை உட்பட இப்போதைய சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் விஞ்ஞானிகள் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) சொசைட்டி கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கி பேசினார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டில் மெய்நிகர் சோதனைக் கூடங்களை உருவாக்க வேண்டியது அவசிம். இதன்மூலம் நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள மாணவர்களிடம் அறிவியலை கொண்டுசெல்ல முடியும்.
இளம் மாணவர்களை அறிவியல் துறைக்கு ஈர்க்க வேண்டியதும் அடுத்த தலைமுறையினரிடம் அறிவியல் ஆர்வத்தை வலுப்படுத்த வேண்டியதும் அவசியம்.
உலகின் பல்வேறு பகுதிகளில் இந்தியர்கள் பணிபுரியும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களில் இணைந்து செயல்படுவதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உட்பட நாடு இப்போது எதிர்கொண்டு வரும் சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் விஞ்ஞானிகள் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் 5ஜி கம்பியில்லா தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை சேமிக்க நீடித்து உழைக்கும் விலை மலிவான பேட்டரிகள் போன்றவை இப்போதுதான் அறிமுகமாகியிருக்கின்றன. இவற்றில் நமது விஞ்ஞானிகள் கவனம் செலுத்த வேண்டும்.
உலகத் தரமான பொருட்களை தயாரிக்க நவீன அறிவியலையும் பாரம்பரிய அறிவையும் இணைக்க வேண்டியது அவசியமாகிறது. இதுபோல புதிய கண்டுபிடிப்புகளை வணிகமயமாக்க வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும்.
சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு சிஎஸ்ஐஆர் விஞ்ஞானிகள் பாடுபட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.