

தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேர் உட்பட 51 மாநிலங்களவை எம்.பி.க்கள் வரும் ஏப்ரலில் ஓய்வு பெறுகின்றனர். மொத்தம் 245 எம்.பி.க்கள் கொண்ட மாநிலங்களவையில் தற்போது 82 எம்.பி.க்கள் பாஜகவிடம் உள்ளனர். 51 எம்.பி.க்கள் ஓய்வால், பாஜகவுக்கு எந்த கவலையும் இல்லை எனக் கருதப்படுகிறது. ஏனெனில், அதன் கூட்டணியிடம் உள்ள எம்.பி.க்களுடன் சேர்த்து பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் உதவியால் பாஜக பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. எனினும், ஓய்வுபெறும் 51 பேரில் புதிதாக பாஜகவுக்கு சுமார் 13 எம்.பிக்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஒடிஸாவின் 3 எம்.பி.க்களில் அங்கு ஆளும் பிஜு ஜனதா தளத்துக்கு 2, பாஜகவுக்கு 1, ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கு அனைத்து 4 எம்.பி.க்களும் மீண்டும் கிடைப்பர். இமாச்சாலப்பிரதேசம் மற்றும் ஹரியாணாவிலும் பாஜகவுக்கு தலா ஒரு எம்.பிக்கள் கிடைக்கலாம். தமிழகத்தின் 6-ல் அதிமுக, திமுகவுக்கு சரிபாதி எம்.பி.க்கள் கிடைப்பார்கள்.
மேற்கு வங்க மாநிலத்தில் காலியாகும் 5-ல், திரிணமூல் காங்கிரஸுக்கு 4-ம் மீதியுள்ள ஒன்று மற்ற கட்சிக்கும் கிடைக்கும். இந்த ஒன்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேசிய செயலாளரான சீதாராம் யெச்சூரிக்கு வாய்ப்பளித்தால் அவருக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
பிஹாரின் 5-ல் அங்கு ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகிய கட்சிகளுக்கு 3-ம், எதிர்க்கட்சியான லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு 2-ம் கிடைக்க உள்ளது. இதில் லாலுவின் கட்சி அவரது மனைவியான ராப்ரி தேவியை மாநிலங்களவைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சியை தக்கவைக்க முடியாததால் பாஜகவுக்கு 2-ம், அதன் கூட்டணியான ராமதாஸ் அதாவாலேவின் குடியரசு கட்சிக்கு ஒன்றும் கிடைக்கும். ஆளும் கட்சியான சிவசேனாவுக்கு 1-ம், அதன் ஆதரவு கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 2 எம்.பிக்களும் கிடைக்க உள்ளனர்.
காலியாகும் மொத்தம் 51 இடங்களில் காங்கிரஸைச் சேர்ந்த எம்.பி.க்கள் 11 பேர் உள்ளனர். இதில் 10 எம்.பி.க்களை மீண்டும் காங்கிரஸ் கட்சி பெற வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஏப்ரலில் காலியாகும் 51 இடங்களில் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு அதிக எண்ணிக்கையில் எம்.பி.க்கள் கிடைக்க உள்ளனர். இருப்பினும் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லாத நிலை ஏப்ரலுக்கு பிறகும் மாநிலங்களவையில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.