ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் வழக்கு
மகாராஷ்டிர மாநிலம் தாணே நகரில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
முஸ்லிம் பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அவரது கணவர் ஷாரிக் ஷேக் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் மீது முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஷாரிக் ஷேக்கும் அவரது குடும்பத்தினரும் வரதட்சிணை கேட்டு கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் தன்னை கொடுமைப்படுத்தி வந்ததாக அப்பெண் தனது புகாரில் கூறியுள்ளார். கொடுமை தாங்காமல் பெற்றோர் வீட்டுக்குப் புறப்படத் தயாரானபோது, ஷாரிக் ஷேக் மூன்று முறை தலாக் கூறி தன்னை சட்டவிரோதமாக விவாகரத்து செய்ததாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஷாரிக் ஷேக் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.- பிடிஐ
