

டெல்லியில் புதிய அரசு பதவியேற்பு விழாவை வித்தியாசமாக நடந்த முடிவெடுத்துள்ள முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பல்வேறு துறைகளில் பணியாற்றுவோரை மேடையில் அமர வைக்க திட்டமிட்டுள்ளார்.
டெல்லியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. பாஜக 8 இடங்களை வென்றது. காங்கிரஸ் கட்சி எந்த இடத்தையும் கைப்பற்றவில்லை.
இந்நிலையில் டெல்லி மாநிலத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக அரவிந்த் கேஜ்ரிவால் நாளை (பிப்ரவரி 16-ம் தேதி) பதவி ஏற்கிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு வருமாறு டெல்லி மக்களுக்கு முதல்வர் கேஜ்ரிவால் அழைப்பு விடுத்தார்.
ஆனால் எந்த அரசியல் கட்சித் தலைவர்களையும், மாநில முதல்வர்களையும் அழைக்கவில்லை என ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது. அதேசமயம் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
பதவியேற்பு நிகழ்ச்சியை வித்தியாசமாக நடந்த முடிவெடுத்துள்ள முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பல்வேறு துறைகளில் பணியாற்றுவோரை மேடையில் அமர வைக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி டெல்லியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வரும் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், பேருந்து ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், மெட்ரோ ரயில் ஓட்டுநர்கள், விவசாயிகள், அங்கன்வாடி பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், கலைஞர்கள், தீயணைப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் என 50 பேர் பதவியேற்பு மேடையில் அமர வைக்கப்படவுள்ளனர்.