

இந்தியாவில் தொடர்ந்து நாங்கள் தொழில் செய்வது உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை மாற்றி அமைப்பதைப் பொறுத்து அமையும் என்று வோடபோன் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது.
தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அலைக்கற்றை பயன்பாடு, உரிமம் தொடர்பாக அதன் வருவாய் அடிப்படையில் அரசுக்கு குறிப்பிட்டத் தொகையை செலுத்த வேண்டும். அந்த வகையில் பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ரூ.1.47 லட்சம் கோடி அரசுக்கு செலுத்த வேண்டும். அத்தொகையை ஜனவரி 23-க்குள் செலுத்த வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 24-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து வோடஃபோன் ஐடியா, ஏர்டெல், டாடா டெலிசர்வீஸ் ஆகிய நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தனித்தனியே மனு தாக்கல் செய்தன. அம்மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜனவரி 23 அன்று நிலுவைத் தொகையைச் செலுத்த முடியாத நிலையில் அந்நிறுவனங்கள் தொலைத் தொடர்புத் துறையிடம் கால அவகாசம் கேட்டன. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நேற்று கடுமையாகக் கண்டனம் தெரிவித்த நிலையில் வரும் மார்ச் 17-தேதிக்குள் நிலுவைக் கட்டணத்தைச் செலுத்த உத்தரவிட்டது.
வோடஃபோன் ஐடியா நிறுவனத்துக்கு ரூ.53,039 கோடி, ஏர்டெல் நிறுவனத்துக்கு ரூ.35,586 கோடி அளவில் நிலுவை உள்ளது. நிலுவைக் கட்டணத் தொகையை உடனடியாகச் செலுத்தவும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசும் நேற்று நள்ளிரவு உத்தரவு பிறப்பித்தது.
இந்த சூழலில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் " தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வருவாய் பகிர்வுத் தொகையை நாங்கள் அடுத்த சில நாட்களில் செலுத்திவிடுகிறோம். ஆனால், நாங்கள் தொடர்ந்து இந்தியாவில் தொழில் செய்வது நாங்கள் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் அளிக்கும் சாதகமான உத்தரவைப் பொறுத்துத்தான் அமையும்" எனத் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து மத்திய அரசிடம் இருந்து அழுத்தமும், நெருக்கடியும் வரும்பட்சத்தில் நிறுவனத்தை மூடிவிடுவதைத் தவிர வழியில்லை என வோடஃபோன் ஐடியா நிறுவனம் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வோடஃபோன் ஐடியா நிறுவனத்துக்கு அலைக்கற்றை நிலுவையாக ரூ.24,729 கோடியும், உரிமைக்கட்டணமாக ரூ.28,309 கோடியும் இருக்கிறது.
உச்ச நீதிமன்ற உத்தரவு வெளியானதைத் தொடர்ந்து வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு நேற்றைய வர்த்தக முடிவில் 22.22 சதவீதம் அளவில் சரிந்து ரூ.3.50-க்கு வர்த்தகமானது.
வோடஃபோன் ஐடியா அதன் மூன்றாம் காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிட்டது. நடப்பு நிதி ஆண்டில் டிசம்பர் மாதம் முடிந்த மூன்றாம் காலாண்டில் வோடஃபோன் ஐடியா ரூ.6,453 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் ரூ.50,898 கோடி நஷ்டத்தைச் சந்தித்து இருந்தது.