Last Updated : 15 Feb, 2020 05:00 PM

 

Published : 15 Feb 2020 05:00 PM
Last Updated : 15 Feb 2020 05:00 PM

சீனாவில் இருந்து டெல்லி வந்த 17 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு; 4 ஆயிரம் பேருக்கு எச்சரிக்கை

சீனாவில் இருந்தும், கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நாடுகளில் இருந்தும் ஜனவரி மாதம் டெல்லிக்கு வந்த 17 பயணிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் ஹூபெய் மாகாணத்தின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் ( கோவிட்-19) தொற்றுக்கு இதுவரை 1,523 பேர் பலியாகியுள்ளனர். 66 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் பரவியுள்ளது

ஜனவரி 17-ம் தேதிக்குப் பின் சீனா மற்றும் கரோனா வைரஸ் தொற்று இருக்கும் நாடுகளுக்கு டெல்லியில் இருந்து சென்றவர்கள், திரும்பி வந்தவர்கள் குறித்த பட்டியல் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

டெல்லி சுகாதாரத்துறையின் தகவலின்படி கடந்த 13-ம் தேதி நிலவரப்படி, சீனா மற்றும் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து டெல்லிக்கு வந்த 5,700 பயணிகளின் உடல்நலம் குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் பலர் தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

இது குறித்து டெல்லி சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "சீனா மற்றும் கரோனா பாதிப்பு இருக்கும் நாடுகளில் இருந்து டெல்லிக்கு வந்த பயணிகளில் 4,707 பேருக்கு கரோனா வைரஸ் குறித்த எந்தவிதமான அறிகுறிகளும் இல்லை. இருப்பினும் மற்றவர்களோடு தொடர்பில் இல்லாமல் சுய கண்காணிப்பில் சிறிது நாட்களுக்கு இருக்குமாறு எச்சரிக்கை செய்துள்ளோம்.

அதேசமயம் 17 பயணிகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 817 பயணிகளைத் தொடர்புகொள்ளவோ, கண்டுபிடிக்கவோ முடியவில்லை. 68 பயணிகள் தீவிரக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்" எனத் தெரிவித்தார்.

ஜனவரி 17-ம் தேதிக்குப் பின் சீனா, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து டெல்லி விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் விமான நிலையத்துக்கு வந்த பயணிகளை ஆய்வு செய்ததில் இதுவரை 21 பேருக்கு கரோனா தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

டெல்லியில் 4,705 பயணிகளுக்கு கரோனா வைரஸ் குறித்த எந்தவிதமான பாதிப்பும், அறிகுறியும் இல்லை, அதில் 1,249 பேர் மேற்கு டெல்லியைச் சேர்ந்தவர்கள், 1,073 பேர் மத்திய டெல்லியில் வாழ்கின்றனர்.

டெல்லி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கரோனா வைரஸ் குறித்த கட்டுப்பாட்டு அறையை டெல்லி அரசு திறந்து செயல்படுத்தி வருகிறது.

டெல்லி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "யாருக்கேனும் ஒருவருக்கு கரோனா வைரஸ் குறித்த பாதிப்பு அறிகுறி தெரிந்தால், உடனடியாக கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ள வேண்டும். கடந்த ஜனவரி 15-ம் தேதிக்குப் பின் டெல்லியில் இருந்து சீனா மற்றும் கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் நாடுகளுக்குச் சென்றவர்கள், திரும்ப வந்தவர்கள் பட்டியல் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x