

டெல்லி முதல்வராக நாளை மீண்டும் பதவியேற்கவுள்ள அரவிந்த் கேஜ்ரிவால் அடுத்த 3 மாதங்களில் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்து புதிய அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளவர்களுடன் விவாதிக்கவுள்ளார்.
டெல்லியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. பாஜக 8 இடங்களை வென்றது. காங்கிரஸ் கட்சி எந்த இடத்தையும் கைப்பற்றவில்லை.
இந்நிலையில் டெல்லி மாநிலத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக அரவிந்த் கேஜ்ரிவால் நாளை (பிப்ரவரி 16-ம் தேதி) பதவி ஏற்கிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சிக்கு வருமாறு டெல்லி மக்களுக்கு முதல்வர் கேஜ்ரிவால் அழைப்பு விடுத்தார்.
ஆனால் எந்த அரசியல் கட்சித் தலைவர்களையும், மாநில முதல்வர்களையும் அழைக்கவில்லை என ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது. அதேசமயம் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
நாளை பதவியேற்பு விழா நடைபெறவுள்ள நிலையில் புதிய அமைச்சர்களாக பதவியேற்கவுள்ள ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களுடன் கேஜ்ரிவால் இன்று இரவு ஆலோசனை நடத்துகிறார். அவர்களுக்கு இரவு விருந்து அளிக்கும் அவர் அடுத்த 3 மாதங்களில் டெல்லியில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்க உள்ளார். இந்த தேர்தலில் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்தும் அவர் விவாதிப்பார் எனத் தெரிகிறது.