Published : 15 Feb 2020 03:33 PM
Last Updated : 15 Feb 2020 03:33 PM

சசிதரூருக்கு ரூ.5000 அபராதம் பிரதமர் மோடிக்கு எதிராக பேசிய அவதூறு வழக்கு:  விசாரணைக்கு ஆஜராகாததால் டெல்லி நீதிமன்றம் உத்தரவு

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நேரில் ஆஜராக தவறியதால் காங்கிரஸ் எம்.பி.சசிதரூருக்கு டெல்லி நீதிமன்றம் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.

பிரதமர் மோடியை கட்டுப்படுத்த முடியாமல் ஆர்எஸ்எஸ் அமைப்பு திணறுவதாகவும், சிவலிங்கத்தின் மீது அமர்ந்து இருக்கும் தேள் போல அவர் இருக்கிறார் என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் அண்மையில் கூறினார்.

பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:

‘‘பொதுவாகவே ஆர்எஸ்எஸ் பின்பற்றி வரும் நடைமுறைகளிலும் இருந்த முற்றிலும் மாறுபட்டவர். அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர் எனக்கூறினாலும் அவரது செயல்பாடு வேறுபட்டுள்ளது. அவரை பற்றி ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய பத்திரிகையாளர் ஒருவர் என்னிடம் சில தகவல்கள் கூறினார்.

அதன்படி பார்த்தால் பிரதமர் மோடியை கட்டுப்படுத்த முடியாமல் ஆர்எஸ்எஸ் திணறுகிறது. சிவலிங்கத்தின் மீதுள்ள தேள்போல பிரதமர் மோடி இருப்பதாக ஆர்எஸ்எஸ்க்கு நெருக்கமானவர்களே கூறுகிறார்கள். தரையில் தேள் இருந்தால் அதனை காலில் உள்ள செருப்பை வைத்துகூட அடித்து விடலாம்.

ஆனால் சிவலிங்கத்தின் மீது தேள் இருப்பதால் எதையும் கொண்டு அடிக்க முடியாது; கொத்தி விடுமே என்று அதனை கைகளால் எடுத்து வெளியே போடவும் முடியாது. இதுதான் ஆர்எஸ்எஸ்ஸின் தற்போதைய நிலை’’ எனக் கூறினார்.

இந்த பேச்சின் மூலம் சசிதரூர் பிரதமர் மோடியை அவமானப்படுத்தி விட்டதாக கூறி பாஜக மூத்த தலைவர் ராஜ்பாபர் டெல்லி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு சசிதரூக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில் சசிதரூர் ஆஜராகவில்லை. இதையடுத்து சசிதரூருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x