

ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கத்தின் தலைவர் ஷா ஃபைஸல் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய காஷ்மீர் நிர்வாகம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சார்பில் முதல் முறையாக ஐஏஎஸ் அதிகாரியாக 2009-ம் ஆண்டு தேர்வானவர் ஷா ஃபைஸல் . காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்ததைத் தொடர்ந்து அவர் தனது ஐஏஎஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டு ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்கத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டபின் ஃபைஸல் டெல்லியில் பல்வேறு ஊடகங்களுக்குப் பேட்டி அளித்து கடும் கண்டனம் தெரிவித்து வந்தார். இதையடுத்து, அவரை டெல்லி விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர்
அங்கிருந்து காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி கொண்டு சென்று தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். தற்போது ஸ்ரீநகரில் உள்ள எம்எல்ஏ விடுதியில் ஃபைஸல் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக தடுப்புக் காவலில் இருந்த ஃபைஸல் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, அலி முகமது சாஹர், நயீம் அக்தர், சர்தாஸ் மதானி, ஹிலால் லோன் ஆகியோர் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இப்போது ஃபைஸலும் அவர்களுடன் இணைந்துள்ளார்.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டாலோ அல்லது வழக்குப் பதிவு செய்யப்பட்டாலோ விசாரணையின்றி ஒரு ஆண்டு வரை போலீஸார் காவலில் வைக்க முடியும்.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் இரு முக்கியப் பிரிவுகள் இருக்கின்றன. முதல் பிரிவு பொதுமக்களைத் தூண்டிவிடுதல், கூட்டம் அமைத்துப் பேசுதல். இரண்டாம் பிரிவு மாநிலத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தல் ஆகியவை ஆகும்.