

கேரள மாநில பாஜகவுக்கு நீண்டகாலமாக தலைவர் நியமிக்காமல் இருந்த நிலையில் கே.சுரேந்திரனை புதிய தலைவராக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா நியமித்துள்ளார்.
கேரள மாநில பாஜகவின் இடைக்காலத் தலைவராக இருந்த பி.எஸ்.ஸ்ரீதரன் மிசோரம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பின் அம்மாநிலத்தில் பாஜக தலைவர் பதவி காலியாகவே இருந்தது. நீண்ட காலத்துக்குப் பின் இப்போது புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ், இடதுசாரிகளுக்குத் தனது கூர்மையான பேச்சால் அதிரடியாக விமர்சனங்களை முன் வைப்பவர் எனும் பெருமையைப் பெற்றவர் கே.சுரேந்திரன்.
மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் தவிர்க்க முடியாத வேட்பாளர் கே.சுரேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்துத் தரப்பு மக்களாலும் அறியப்படுபவர். கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மஞ்சேஸ்வரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட சுரேந்திரன், 89 வாக்குகளில் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் பி.பி. அப்துல் ரசாக்கிடம் தோல்வி அடைந்தார்.
கோழிக்கோடு மாவட்டம், உளியேறியில் பிறந்தவர் இவர், மக்களவைத் தேர்தலில் பத்தினம்திட்டா தொகுதியிலும், இடைத் தேர்தலில் கொன்னி தொகுதியிலும் போட்டியிட்டார். இந்த இரு தேர்தலிலும் வெல்ல முடியாவிட்டாலும் வாக்கு சதவீதத்தைப் பெருக்கிக் கொண்டு 3-வது இடத்தைப் பிடித்தார்.
மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரனுக்கு நெருக்கமானவராக சுரேந்திரன் கருதப்படுகிறார். பாஜகவைப் பொறுத்தவரை ஒரு வெற்றி என்னவென்றால் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஓ.ராஜகோபால் வெற்றி பெற்றது மட்டும்தான்.
பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து கே.சுரேந்திரன் கூறுகையில், "பாஜக தலைமை என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு மாநிலத் தலைவர் பதவி அளித்துள்ளது. அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் என்னால் முடிந்தவரை சிறப்பாகப் பணியாற்றி அனைத்து மட்டத்திலும் கட்சியைக் கொண்டு செல்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.