

‘‘நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட 3 பேருக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்த வேண்டும்’’ என்று சிறப்பு நீதிமன்றத்தில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜார்க்கண்டில் ‘அமர்கோண்டா முர்கடங்கல்’ நிலக்கரி சுரங்கம் அமைக்க பிரபல தொழிலதிபர் நவீன் ஜிண்டாலின் நிறுவனங்களான ‘ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட்’, ‘ககான் ஸ்பான்ஞ் ஐயன் பிரைவேட் லிமிடெட்’ ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
நிலக்கரி ஊழலில் நவீன் ஜிண்டால், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, மத்திய நிலக்கரி துறை இணை அமைச்சர் தாசரி நாராயண ராவ், நிலக்கரி துறை முன்னாள் செயலர் எச்.சி.குப்தா மற்றும் 5 நிறுவனங்கள் உட்பட 11 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. மேலும், இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் நவீன் ஜிண்டால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், ‘‘நவீன் ஜிண்டால் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழங்கிய போது, அப்போது பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். அவரே நிலக்கரித் துறை அமைச்சர் பொறுப்பையும் வகித்து வந்தார். எனவே, இந்த வழக்கில் மன்மோகன் சிங், நிலக்கரித் துறை செயலர் ஆனந்த் ஸ்வரூப், சுரங்கம் மற்றும் புவியியல் துறை செயலர் ஜெய் சங்கர் திவாரி ஆகிய 3 பேருக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பி வரவழைக்க வேண்டும். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டும்’’ என்று சிறப்பு நீதிமன்றத்தில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா மனு தாக்கல் செய்துள்ளார்.
இதையடுத்து, மதுகோடா தாக்கல் செய்த மனுவின் நகலை சிபிஐ.க்கு வழங்கிய நீதிமன்றம், இதுகுறித்து பதில் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், நிலக்கரி ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் விவாதத்தின்போதே, மதுகோடாவின் மனு மீதான விவாதமும் நடத்தப்பட வேண்டும் என்று கோரினார். இதை ஏற்று கொண்ட சிறப்பு நீதிமன்றம், 28-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று உத்தரவிட்டது.