

பிரதமர் நரேந்திர மோடியை போர்ச்சுகல் அதிபர் மார்சலோ ரெபேலோ டிசவுசா நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். இந்தியா - போர்ச்சுகல் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
போர்ச்சுகல் அதிபர் மார்சலோ ரெபேலோ டிசவுசா 4 நாள் அரசு முறைப் பயணமாக நேற்று முன்தினம் இரவு இந்தியா வந்தார். டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் அவருக்கு நேற்று காலை வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை டிசவுசா சந்தித்துப் பேசினார். இருதரப்பு உறவுகள், வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. பிறகு, இரு நாடுகளுக்கு இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
முதலீடு, போக்குவரத்து, துறைமுகங்கள், கலாசார பரிவர்த்தனை, தொழில்துறை, அறிவுசார் சொத்துரிமை ஆகியவை தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று இரவு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை டிசவுசா சந்தித்து பேசினார்.
டிசவுசாவைக் கவுரவிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் விருந்தளித்தார். இன்று மகாராஷ்டிரா, கோவாவுக்கு செல்லும் டிசவுசா அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.