Published : 15 Feb 2020 08:29 AM
Last Updated : 15 Feb 2020 08:29 AM

கம்பாளா பந்தயத்தில் 142.50 மீட்டர் தொலைவை 13.62 வினாடிகளில் கடந்து புதிய சாதனை: உசேன் போல்ட்டையே பின்னுக்கு தள்ளிய இளைஞர்

மங்களூருவில் நேற்று நடைபெற்ற கம்பாளா பந்தயத்தில் பங்கேற்ற நிவாச கவுடா.

பெங்களூரு

கர்நாடகாவில் நடைபெற்ற கம்பாளா எருமை மாட்டுப் பந்தயத்தில் புகழ்பெற்ற ஒலிம்பிக் வீரர் உசேன் போல்ட்டின் சாதனையை சாமானிய இளைஞர் ஒருவர் முறியடித்திருக்கிறார்.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள மங்களூரு, உடுப்பி ஆகிய கடலோர பிராந்தியங்களில் ‘கம்பாளா' என்ற பெயரில் பாரம்பரியமிக்க எருமை மாட்டு பந்தயம் நடைபெற்று வருகிறது. அறுவடைத் திருநாளைக் கொண்டாடும் விதமாக, 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே, இந்தப் பந்தயத்தின்போது வேகமாக ஓட வேண்டும் என்பதற்காக போட்டியாளர்கள் எருமை மாடுகளை ஆணிகளால் குத்துவதாக புகார் எழுந்தது. இதன் காரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு கர்நாடகா மாநிலத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்தது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 2017-ம் ஆண்டு இந்தப் போட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சட்ட திருத்தத்தின் மூலமாக கர்நாடகா அரசு நீக்கியது.

அந்த வகையில், தென் கன்னடா மாவட்டத்தில் உள்ள மூடபித்ரி என்ற கிராமத்தில் கம்பாளா போட்டி நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதில் 250 ஜோடி எருமை மாடுகள் கலந்து கொண்டன.

இந்நிலையில், இந்தப் போட்டியில் ஸ்ரீநிவாச கவுடா (28) என்ற இளைஞர் முதல் பரிசை வென்றார். அவர் தனது எருமை மாடுகளுடன் 142.50 மீட்டர் தொலைவை வெறும் 13.62 வினாடிகளில் கடந்தார். இதன் மூலம், கம்பாளா பந்தயத்தில் 30 ஆண்டுகளாக இருந்து வந்த சாதனையை அவர் முறியடித்ததாக பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், இதுதொடர்பான செய்திகள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள தொலைக்காட்சிகளில் வெளியாகின.

இதையடுத்து, அவரது வேகத்தை உசேன் போல்ட்டுடன் சிலர் வேடிக்கையாக ஒப்பிட்டு பார்த்துள்ளனர். இதில், உசேன் போல்ட்டை விட ஸ்ரீநிவாச கவுடா வேகமாக ஓடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 142.50 மீட்டரை 13.62 வினாடிகளில் ஸ்ரீநிவாச கவுடா கடந்திருக்கிறார் என்றால், 100 மீட்டரை அவர் 9.55 வினாடிகளில் கடந்திருக்கிறார். ஒலிம்பிக்கில் 100 மீட்டரை கடக்க ஜமைக்காவைச் சேர்ந்த உசேன் போல்ட் 9.58 வினாடிகள் எடுத்துக் கொண்டார். அப்படி பார்க்கும் போது, அவரது சாதனையை ஸ்ரீநிவாசகவுடா முறியடித்து விட்டதாக சமூக வலைதளங்களில் நேற்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மேலும், அவரை முறையாக பயிற்றுவித்தால் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு அவர் நிச்சயம் தங்கம் வாங்கி தருவார் எனவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x