Last Updated : 15 Feb, 2020 07:20 AM

 

Published : 15 Feb 2020 07:20 AM
Last Updated : 15 Feb 2020 07:20 AM

தேர்தல் தோல்வியால் துவண்டிருக்கும் காங்கிரஸுக்கு துல்லிய நடவடிக்கை தேவை: மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கருத்து

வீரப்ப மொய்லி

பெங்களூரு

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தோல்வியால் துவண்டு கிடக்கும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிரூட்ட துல்லிய நடவடிக்கை தேவை என அக்கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

டெல்லியில் அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 62 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று வீரப்ப மொய்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்த அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் என எதிர்பார்க்கவில்லை. இந்த தோல்வி குறித்து நாங்கள் எங்கள் கட்சியின் செயற்குழுவில் சுயபரிசோதனை செய்வோம்.

தவறு எங்கு நடந்தது என கண்டறிந்து, அதற்குரிய நடவடிக்கை எடுப்போம். சிலர் காங்கிரஸின் வாக்குகள் ஆம் ஆத்மி கட்சிக்கு விழுந்து விட்டதாக கூறுகின்றனர்.

பாஜகவை ஆம் ஆத்மியால் தான் வீழ்த்த முடியும் என வாக்காளர்கள் நினைத்துள்ளனர். எனவே காங்கிரஸுக்கு வாக்களிப்பதால் எந்த பயனும் ஏற்படாது என நினைத்துவிட்டதாக தெரிகிறது. இந்த தோல்வி காங்கிரஸுக்கு மிகப்பெரிய பாடம். அதில் இருந்து நிச்சயம் பாடம் கற்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

தேர்தல் தோல்வியால் துவண்டு கிடக்கும் தொண்டர்களுக்கும், கட்சிக்கும் புத்துயிரூட்ட உடனடியாக துல்லிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த துல்லிய தாக்குதல் நடவடிக்கையில் கட்சியின் வெற்றிக்கு உதவாத அனைவரையும் ஓரம் கட்ட வேண்டும். ஆற்றல் மிகுந்த புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே காங்கிரஸை காப்பாற்ற முடியும்.

இந்த சரியான நேரத்தை கைவிட்டால், வேறு வாய்ப்புகள் அமையாது. காங்கிரஸின் தோல்விக்கு ஒரு சில தலைவர்களை மட்டும் காரணமாக சொல்ல விரும்பவில்லை. இதற்கு ஒட்டுமொத்த கட்சி அமைப்பு முறையே காரணம். இந்த தோல்விக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை அமைப்பு ரீதியாக மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x