

மக்கள் அனைவருக்கும் ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கொள்கை வகுப்பாளர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் 58-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி 283.37 மில்லியன் டன்னாக உள்ளது. இது திருப்தி அளிக்கிறது என்றாலும் உலகளாவிய பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு குறியீட்டில் இந்தியா 102-வது இடத்தில் உள்ளது. இது கவலை அளிக்கிறது. இதனை கொள்கை வகுப்பாளர்கள், அரசியல்வாதிகள், வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கொள்கை வகுப்பதில், அதை நடைமுறைப்படுத்துவதில் மற்றும் முன்னுரிமை தருவதில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என ஆராய வேண்டும். மக்கள் அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
1950-51-ல் நாட்டின் உணவு தானிய உற்பத்தி 51 மில்லியன் டன்னாக இருந்தது. இது தற்போது 283.37 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்துள்ளோம். ஆனால் இது போதாது. புரதச்சத்து பாதுகாப்பை நாம் பெறவேண்டும். மக்கள் ஒவ்வொருவருக்கும் வைட்டமின் பற்றாக்குறை உள்ளது. எனவே ஊட்டச்சத்து மிகுந்த தானியங்கள், பருப்பு வகைகள், தோட்டப் பயிர்கள் உற்பத்தியை நாம் அதிகரிக்க வேண்டும்.
இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. துரதிருஷ்டவசமாக இப்பிரச்சினையில் யாரும் கவனம் செலுத்தவில்லை. மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தி, உணவு தானிய உற்பத்தியை நாம் அதிகரிக்க வேண்டும். இது, நமக்கு மட்டுமல்ல உலகளாவிய உணவுப் பாதுகாப்புக்கு அவசியமாகும்.இவ்வாறு வெங்கய்ய நாயுடு பேசினார்.