

இடஒதுக்கீடு விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதே தீர்வாகும் என த்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநில அரசு கடந்த 2012-ம் ஆண்டு, செப்டம்பர் 5-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் சில அரசுப் பணியிடங்களை நிரப்ப எஸ்சி,எஸ்டி இட ஒதுக்கீடு இல்லாமல் அறிவித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் அந்த அறிவிப்பை ரத்து செய்து இட ஒதுக்கீட்டுடன் அறிவிப்பு வெளியிட உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தில் உத்தரகாண்ட் அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அரசு வேலைவாய்ப்புகளில் எஸ்.ஸி, எஸ்.டி, ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கு வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கோருவதற்கு எந்த தனிநபருக்கும் அடிப்படை உரிமை இல்லை. இட ஒதுக்கீடு வழங்கிடக் கோரி நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா ஆகியோர் இந்த தீர்ப்பை வழங்கினர். இந்த உத்தரவு நாடுமுழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் கூறியதாவது:
‘‘இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்துள்ள தீர்ப்பு ஏற்க முடியாத ஒன்றாக உள்ளது. இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை நீதிமன்றங்கள் மறு ஆய்வு செய்ய முடியாது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் இடஒதுக்கீடு விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதே தீர்வாகும்’’ எனக் கூறினார்.