

அரசியலில் குற்றவாளிகள் போட்டியிடாமல் செய்வதற்காக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவுகள், தேர்தல் ஜனநாயகத்தை மேம்படுத்த புதிய தார்மீக அளவுகோல்களை நீண்டகாலத்துக்கு உருவாக்க உதவும் என்று தேர்தல் ஆணையம் வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
அரசியலில் குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்களைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் சமீபத்தில் பிறப்பித்தது. அதன்படி, வேட்பாளர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை தேசிய நாளேடு, பிராந்திய நாளேடு, தொலைக்காட்சி ஆகியவற்றில் வேட்பாளர் தேர்வுசெய்யப்பட்ட 48 மணிநேரத்தில் விளம்பரம் செய்ய வேண்டும், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்தபின் அதற்குரிய காரணத்தை தங்கள் இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை உருவாக்கியது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டி நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பி்ல கூறியிருப்பதாவது:
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அரசியல் கட்சிகள் தங்கள் வாக்காளர்களுக்கு வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்து விளம்பரப்படுத்தும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள், உத்தரவுகளில் மாற்றம் செய்து மீண்டும் வெளியிடப்படும்.
கடந்த 2018 ஆண்டு அக்டோபர் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளே 2018 நவம்பர் மாதத்தில் இருந்து அனைத்து தேர்தலில்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தும் வகையில் கடந்த கால உத்தரவுகளில் தேவையான மாற்றங்கள் செய்துதேர்தல் ஆணையம் வெளியிடும்.
உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்தரவுகளை, வழிகாட்டி நெறிமுறைகளை முழு மனதுடன் தேர்தல் ஆணையம் வரவேற்கிறது. இந்த உத்தரவுகள் தேர்தல் ஜனநாயகத்தை மேம்படுத்த புதிய தார்மீக அளவீடுகளை நீண்டகாலத்துக்கு உருவாக்க உதவும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கடந்த 2018-ம்ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுப்படி வேட்பாளர்கள் தங்கள் மீது நிலுவையில் உள்ள குற்றவழக்குகள் குறித்து தொலைக்காட்சிகள், நாளேடுகளில்ல தேர்தல் நேரத்தில் மூன்றுமுறை விளம்பரம் செய்ய வேண்டும். அதற்கான செலவை வேட்பாளர்களே ஏற்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது