Published : 14 Feb 2020 17:25 pm

Updated : 14 Feb 2020 17:25 pm

 

Published : 14 Feb 2020 05:25 PM
Last Updated : 14 Feb 2020 05:25 PM

புல்வாமா தாக்குதல் நினைவஞ்சலி: ராகுல் காந்தி, யெச்சூரி, பாஜக தலைவர்கள் இடையே வார்த்தை மோதல்

rahul-asks-who-benefitted-from-pulwama-strike-bjp-calls-him-let-and-jaish-sympathiser
புல்வாமா தீவிரவாத தாக்குதல் : கோப்புப்படம்

புதுடெல்லி

புல்வாமா தீவிரவாத தாக்குதல் முதல் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்படும் நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கும், பாஜகவினருக்கும் இடையே ட்விட்டரில் கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 78 பேருந்துகளில் துணை ராணுவப்படையினர் சென்றனர். அப்போது புல்வாமா மாவட்டம், அவந்திபோரா பகுதியில் வந்தபோது, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி ஒருவர் காரில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை நிரப்பிப் பாதுகாப்புப் படை வீரர்கள் வந்த ஒரு வாகனத்தின் மீது மோதி தாக்குதல் நடத்தினார்.

இந்த கொடூரத் தாக்குதலில் வாகனத்தில் பயணம் செய்த 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூரத் தாக்குதல் சம்பவம் நடந்த இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தியும் புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.

ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் " புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்எப் வீரர்கள் கொல்லப்பட்டதை இன்று நாம் நினைவுகூர்கிறோம். இப்போது சில கேள்விகளை முன்வைக்கிறேன். இந்த தாக்குதல் குறித்த விசாரணையில் என்ன கிடைத்தது?, இந்த தாக்குதலால் அதிகமாகப் பயனடைந்தது யார்? இந்த தாக்குதலுக்கு அனுமதித்த பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பாஜக அரசில் இதுவரை யார் பொறுப்பேற்றுள்ளது?" என கேள்வி எழுப்பி இருந்தார்

இதற்கு பாஜக சார்பில் அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்ம ராவ் ட்விட்டரில் பதில் கொடுத்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறுகையில், " புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தேசமே அஞ்சலி செலுத்தும்போது, லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது அனுதாபியான ராகுல் காந்தி, மத்திய அரசை மட்டும் குறிவைத்துக் குறைகூறாமல், பாதுகாப்புப் படையினரையும் சந்தேகிக்கிறார். உண்மைக் குற்றவாளிகளை ஒருபோதும் ராகுல் கேள்வி கேட்கமாட்டார்" எனத் தெரிவித்துள்ளார்

நரசிம்ம ராவ்

பாஜகவின் மற்றொரு தலைவர் ஷாநவாஸ் ஹூசைன் கூறுகையில், " நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களை அவமதிக்கும் வகையில் ராகுல் காந்தி கருத்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சி கடந்த காலத்தில் செய்த தவற்றுக்குத்தான் மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளார்கள். ராகுல் காந்தியின் இதுபோன்ற கருத்துக்கள் சர்வதேச அரங்கில், இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் வாதங்களை முன்வைக்க உதவும்" என விமர்சித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் " புல்வாமா தீவிரவாத தாக்குதல் நடந்து ஓர் ஆண்டாகிவிட்டது, விசாரணை அறிக்கை எங்கே?, உளவுத்துறையின் மிகப்பெரிய தோல்வியால் ஏராளமான உயிரிழப்பு நடந்ததற்கு யார் பொறுப்பேற்பது.

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்களை வெளிப்படையாகக் கூறி மோடியும், பாஜகவும் தேர்தலில் வாக்குக் கேட்டார்கள். இந்த தேசத்துக்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தாருக்கு அரசு என்ன செய்துள்ளது" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முகமது சலிம் ட்விட்டரில் கூறுகையில், " நம்முடைய திறமையின்மையை நினைவுபடுத்தும் வகையில் நினைவுச்சின்னம் தேவையில்லை. நமக்குத் தெரியவேண்டியது எல்லாம், இந்த தேசத்தில் அதிகமான ராணுவப் பாதுகாப்பு இருக்கும் புல்வாமாவில் எப்படி 80கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து கொண்டுவரப்பட்டு வெடிக்கப்பட்டது. புல்வாமா தாக்குதலுக்கு நீதி கிடைப்பது அவசியம்" எனத் தெரிவித்துள்ளார்


RahulPulwama strikeBJP calls him LeTJaish sympathiserThe Pulwama terror attackCongress leader Rahul GandhiThe BJPபுல்வமா தாக்குதல்புல்வாமா தீவிரவாத தாக்குதல்ராகுல் காந்திபாஜக பதிலடிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author