Last Updated : 14 Feb, 2020 05:27 PM

 

Published : 14 Feb 2020 05:27 PM
Last Updated : 14 Feb 2020 05:27 PM

பெண்கள் கல்லூரியில் மாதவிடாய் குறித்த பரிசோதனை: நடவடிக்கைக் கோரி மாணவிகள் போர்க்கொடி

மாணவிகள் புகார் குறித்து இன்று கருத்து தெரிவித்த கல்லூரியின் பொறுப்பான பல்கலையின் துணைவேந்தர் தர்ஷனா தோலகியா. | படம்: ஏஎன்ஐ

புஜ்

குஜராத்தில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் நிர்வாகம் மோசமாக நடந்துகொண்டதை அடுத்து கல்லூரியின் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மாணவிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

குஜராத்தின் பூஜில் உள்ள ஸ்ரீ சஹஜானந்த் பெண்கள் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த (எஸ்.எஸ்.ஜி.ஐ) 68 மாணவிகள் மாதவிடாய் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகவும் இதனால் அவர்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீ சஹஜானந்த் பெண்கள் கல்லூரியை சுவாமநாராயண் த்விசதாபி மருத்துவ மற்றும் தொண்டு அறக்கட்டளை நிர்வகிக்கிறது. பெண்கள் மாதவிடாயின் போது கோவிலுக்குள் அல்லது சமையலறைக்குள் நுழைய முடியாது என்று சுவாமிநாராயண் பிரிவின் விதிமுறைகள் கூறுகின்றன. இந்த நிறுவனத்தில், அந்த நாட்களில் பெண்கள் மற்ற மாணவிகளைத் தொடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்லூரியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பல்கலைக்கழகம் இது நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளது.

தங்கள் மீது தவறான நடவடிக்கை மேற்கொண்ட கல்வி நிறுவனத்தின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாணவிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிகள் இன்று கூறியதாவது:

நாங்கள் பயிலும் எங்கள் கல்லூரியை மிகவும் மதிக்கிறோம். ஆனால் அவர்கள் சரியாக எங்களிடம் நடந்துகொள்ளவில்லை.

கல்லூரி வளாகத்திற்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ள கோவிலில் சில மாணவிகள் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தபோது அங்கு வந்த சில மாணவிகள் அவர்களை தொட்டு பேசினர். இதனை அறிந்த விடுதி வார்டன் முதல்வரிடம் கூறியுள்ளார். முதல்வரும், மத விதிகளைக் காரணம் காட்டி மாதவிடாயில் உள்ளவர்கள் இப்படி நடந்துகொள்ள அனுமதிக்க முடியாது. உங்களில் யார் யாருக்கெல்லாம் மாதவிடாய் உள்ளது என் அவர் கேட்க எங்களில் இருவர் தங்களுக்கு மாதவிடாய் எனத் தெரிவித்தனர்.

இதனை அடுத்து வகுப்பில் இருந்த மற்ற 68 பெண்களையும் ஓய்வறைக்கு அழைத்துச்சென்று மற்றவர்கள் மாதவிடாய் இல்லை என்று நிரூபிக்கும்படி கட்டாயப்படுத்தினர். இந்த சம்பவம் எங்களை அவமானப்படுத்தியதோடு மிகுந்த மனவேதனை அளித்தது.

இவர்களை நாங்கள் புகார் செய்துள்ளோம். ஆனால் அந்தப் புகாரை திரும்பப் பெற வேண்டும் என எங்களை மிரட்டி வருகின்றனர். மாணவிகளிடம் மோசமாக நடந்துகொண்ட கல்லூரி அதிகாரிகள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு மாணவிகள் தெரிவித்தனர்.

இக்கல்லூரிக்கு பொறுப்பான பல்கலையின் துணை வேந்தர் தர்சனா தொலாக்கியா இதுகுறித்து கூறுகையில், ''இந்த விவகாரம் கல்லூரியின் நிர்வாகத்துடன் தொடர்புடையது, இது பல்கலைக்கழகத்துடனோ அல்லது கல்லூரியுடனோ எந்த்த தொடர்பும் இல்லை. மாணவிகளின் அனுமதியுடன் எல்லாம் நடந்தது, யாரும் கட்டாயப்படுத்தப்படவில்லை. யாரும் அவர்களைத் தொடவில்லை. இது குறித்து விசாரிக்க விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x