Published : 14 Feb 2020 05:17 PM
Last Updated : 14 Feb 2020 05:17 PM

தொலைத்தொடர்பு கட்டண விவகாரம்: உச்ச நீதிமன்றத்தின் காட்டமான கண்டிப்புக்குப் பிறகு டெஸ்க் அதிகாரி கடிதம் வாபஸ்

தொலைத்தொடர்புத் துறைக்கு ரூ.1.47 லட்சம் கோடி செலுத்த வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குப் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்தாத அதிகாரியையும், தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் உச்ச நீதிமன்றம் இன்று காட்டமாகக் கண்டித்தது. இதனையடுத்து சர்ச்சைக்குரிய தொலைத்தொடர்புத் துறை டெஸ்க் அதிகாரி கடிதம் உடனடியாக வாபஸ் பெறப்பட்டது.

ஏஜிஆர் கட்டணம் தொடர்பாக கடந்த அக்டோபரில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ஏஜிஆர் எனப்படும் சரிகட்டப்பட்ட நிகர வருவாயில் இருந்து குறிப்பிட்ட சதவீதத் தொகையை ஆண்டு உரிமக் கட்டணமாகத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்குச் செலுத்த வேண்டும்.

அதோடு, அந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அலைக்கற்றைப் பயன்பாட்டுக்கான கட்டணம், ஈவுத்தொகை மற்றும் சொத்து வருமானம் உள்ளிட்டவை சரிகட்டப்பட்ட நிகர வருவாயாகக் கணக்கிடப்பட்டு, அதில் குறிப்பிட்ட சதவீதத்தை ஆண்டு உரிமக் கட்டணமாக மத்திய அரசுக்குத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இதன்படி பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு ரூ.1.47 லட்சம் கோடி செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது.

ஆனால், ரூ.1.47 லட்சம் கோடியைச் செலுத்துவதை மறு ஆய்வு செய்யக்கோரி வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சார்பில் மறுஆய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவைக் கடந்த ஜனவரி 16-ம் தேதி நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே தொலைத்தொடர்பு துறையின் டெஸ்க் ஆபிஸர் தொலைத்தொடர்பு நிறுவனங்களைப் பணம் செலுத்தக்கூறி அழுத்தம் கொடுக்கக்கூடாது, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது என்று அட்டர்னி ஜெனரல், மற்றும் முக்கிய அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இந்தக் கடிதம்தான் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ராவின் கடும் கோபத்துக்கு ஆளானது. உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த வேண்டாம் என்று கடிதம் எழுதிய தொலைத்தொடர்புத் துறையின் டெஸ்க் ஆபிஸரைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.

நீதிபதி அருண் மிஸ்ரா காட்டமாகக் கூறுகையில், " உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி எப்படி தொலைத்தொடர்பு துறையின் டெஸ்க் ஆபிஸர் கடிதம் எழுத முடியும்? இந்த நாட்டில் சட்டம் இருக்கிறதா? இப்படித்தான் நீதிமன்றத்தை நடத்துவீர்களா?

இது 100% கோர்ட் அவமதிப்பாகும். உங்கள் டெஸ்க் அதிகாரி இன்னும் அரை மணிநேரத்திலோ ஒரு மணிநேரத்திலோ அந்தக் கடித உத்தரவைத் திரும்பப் பெறவில்லை எனில் அவர் இன்றைக்கே சிறைக்கு அனுப்பப்படுவார். அந்தக் கடிதத்தை உடனே வாபஸ் பெற வேண்டும். அந்த டெஸ்க் அதிகாரி இங்கு வந்தாக வேண்டும்.

இப்படிப்பட்ட முட்டாள்தனத்தை யார் செய்தார்கள் என எங்களுக்குத் தெரியாது. இவை அனைத்தையும் உருவாக்கியது யார்? நான் மிகவும் வேதனைப்படுகிறேன். இந்த நீதிமன்றத்தில், நீதிமன்றச் செயல்பாட்டு முறையில் வேலை செய்யக்கூடாது என்று நான் உணர்கிறேன். நான் மனவேதனையோடு முழுப் பொறுப்புணர்வுடன் இதைக் கூறுகிறேன்” என்று கடும் கோபத்துடன் தெரிவித்தார்.

இதனையடுத்து தொலைத் தொடர்புத் துறை நிலுவைத் தொகையை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி செலுத்தாத நிறுவனங்கள் மீது எந்த வித பலவந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்ற கடித உத்தரவை வாபஸ் பெற்றதாக அறிவித்திருக்கிறது.

மேலும், கள அதிகாரிகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தும் விதமாக தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தொலைத்தொடர்பு துறை அறிவுறுத்தியது.

தொடர்புடையவை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x