

டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் 16-ம் தேதி நடக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
எந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், வெளிமாநிலத் தலைவர்களுக்கும், முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படாது என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்த நிலையில் இன்று பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
டெல்லியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. பாஜக 8 இடங்களை வென்றது. காங்கிரஸ் கட்சி எந்த இடத்தையும் கைப்பற்றவில்லை.
இந்நிலையில் டெல்லி மாநிலத்தின் முதல்வராக மூன்றாவது முறையாக அரவிந்த் கேஜ்ரிவால் வரும் 16-ம் தேதி பதவி ஏற்கிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் நிகழ்ச்சிக்கு வருமாறு டெல்லி மக்களுக்கு முதல்வர் கேஜ்ரிவால் அழைப்பு விடுத்தார்.
ஆனால் ,எந்த அரசியல் கட்சித் தலைவர்களையும், மாநில முதல்வர்களையும் அழைக்கவில்லை என ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது. இந்நிலையில் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி மாநில ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய் நிருபர்களிடம் கூறுகையில், "வரும் ஞாயிற்றுக்கிழமை கேஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவி ஏற்கும் விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதப்பட்டு, அனுப்பி வைக்ககப்பட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்த 8 எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே முதல்வர் கேஜ்ரிவால் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி இதில் பங்கேற்பாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. பிரதமர் மோடி ஏற்கெனவே திட்டமிட்டபடி வரும் ஞாயிற்றுக்கிழமை வாரணாசித் தொகுதிக்குச் சென்று 30 திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடக்கும் பதவியேற்பு விழாவில் டெல்லி மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனக் கோரி நாளேடுகளில் ஆம் ஆத்மி அரசு சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.