

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளதற்கு எதிராக அவரின் சகோதரி சாரா அப்துல்லா பைலட் தாக்கல் செய்த மனுவை ஏற்று ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா பைலட் கடந்த திங்களன்று, உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தனது சகோதரர் உமர் அப்துல்லாவை பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளனர்.
அந்த உத்தரவை ரத்து செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். சிஆர்பிசி சட்டத்தைப் பயன்படுத்தி, தனிநபர்களை, குறிப்பாக அரசியல் தலைவர்களை அதிகாரிகள் சிறையில் அடைக்கிறார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். கபில் சிபல் வாதிடுகையில், "இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
அப்போது நீதிபதிகள், "எந்த அடிப்படையில் உமர் அப்துல்லா தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்? ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் ஏதாவது மனுத் தாக்கல் செய்துள்ளீர்களா? ஏதாவது நிலுவையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள்" எனத் தெரிவித்தனர்.
அதற்கு கபில் சிபல், " எங்கள் தரப்பில் யாரும் உயர் நீதிமன்றத்தில் முறையிடவில்லை" எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், "இந்த வழக்கை 3 வாரங்களுக்குப் பின் விசாரிக்கிறோம். அதாவது மார்ச் 2-ம் தேதி விசாரிக்கப்படும்" எனத் தெரிவித்தனர்.
ஆனால், கபில் சிபல், "இந்த வழக்கை அடுத்த வாரத்தில் விசாரணைக்கு எடுக்க வேண்டும். ஆட்கொணர்வு மனு என்பதால் தனிநபர் உரிமை சார்ந்தது. தாமதமாக விசாரணை நடத்த வேண்டாம்" எனத் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், "நீங்கள் நீண்டகாலமாகவே காத்திருக்கிறீர்கள். இன்னும் 15 நாட்கள் காத்திருக்க முடியாதா? ஒருநாள் இரவில் வழக்கை விசாரிக்க முடியாது. இந்த வழக்கில் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்" எனத் தெரிவித்தனர்.