

2017-ல் பிஆர்டி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 60 குழந்தைகள் இறந்த துயரச் சம்பவத்தின் போது தலைப்புச் செய்தியாகத் திகழ்ந்த கோரக்பூர் மருத்துவர் கஃபீல் கான் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிராகப் பேசியதையடுத்து அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் கீழ் மருத்துவர் கஃபீல்கான் கைது செய்யப்பட்டு மதுரா சிறையில் இருந்து வருகிறார். அவருக்குத் திங்கள்கிழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவர் விடுவிக்க போலீஸார் மறுத்துவிட்டனர்
கடந்த மாதம் 29-ம் தேதி மும்பையில் நடந்த கூட்டத்தில் இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் மருத்துவர் கஃபீல் கான் பேசியதாக அவர் மீது குற்றம்சாட்டி போலீஸார் கைது செய்தனர்.
மும்பையில் கைது செய்யப்பட்ட கஃபீல் கான் அங்கிருந்து அலிகருக்குக் கொண்டுவரப்பட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவில் மதுரா சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன்பின் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பிணையில் கஃபீல் கான் விடுவிக்கப்பட்டு, மீண்டும் இதுபோன்ற தவற்றைச் செய்யக்கூடாது என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி உ.பி.யில் உள்ள அலிகர் பல்கலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மருத்துவர் கஃபீல் கான் பேசியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், மும்பையில் நடந்த கூட்டத்தில் இரு பிரிவினருக்கு இடையே மோதலை உண்டாக்கும் வகையில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் திங்கள்கிழமை கஃபீல் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், அவரை போலீஸார் விடுவிக்கவில்லை.
கடந்த டிசம்பர் 12-ம் தேதி அலிகர் பல்கலையில் பேசிய கஃபீல் கான் குடியுரிமைத்திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் பேசியதாகவும், இரு மதக்குழுக்களுக்கு இடையே மோதலை உண்டாக்கும் விதத்தில் பேசியதால் அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கஃபீல்கான் சகோதரர் அதீல்கான் நிருபர்களிடம் கூறுகையில், " கஃபீல் கான் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளதை இன்றுகாலையில் தான் தெரிந்து கொண்டோம். அவருக்கு திங்கள்கிழமையே ஜாமீன் கிடைத்த நிலையிலும் அவர் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. தொடர்ந்து மாநில அரசால் கஃபீல்கான் குறிவைக்கப்படுகிறார்" எனத் தெரிவித்தார்
இதற்கிடையே, தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் மூலம் நேற்று சிறைக்கு தகவல் அனுப்பப்பட்டு, கஃபீல் கான் மீது தேசியப் பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ள தகவல் தெரிவிக்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.