

புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்ததை இந்த தேசம் ஒருபோதும் மறக்காது என்று பிரதமர் மோடி புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 78 பேருந்துகளில் துணை ராணுவப்படையினர் சென்றனர். அப்போது புல்வாமா மாவட்டம், அவந்தி போரா பகுதியில் வந்தபோது, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி ஒருவர் காரில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை நிரப்பிப் பாதுகாப்புப் படை வீரர்கள் வந்த ஒரு வாகனத்தின் மீது மோதி தாக்குதல் நடத்தினார்.
இந்த கொடூரத் தாக்குதலில் வாகனத்தில் பயணம் செய்த 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூரத் தாக்குதல் சம்பவம் நடந்த இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி ட்விட்டரில் நினைவஞ்சலி செலுத்தியுள்ளார். ட்விட்டரில் பிரதமர் மோடி கூறுகையில், " கடந்த ஆண்டு புல்வாமா தாக்குதலில் தங்கள் இன்னுயிரை நீத்த துணிச்சல் மிக்க சிஆர்பிஎப் வீரர்களுக்கு என அஞ்சலிகள். நம்முடைய தேசத்தை காக்கவும், சேவை செய்யவும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த தனித்துவம் மிக்கவர்கள். இந்த தேசம் ஒருபோதும் இந்த வீரர்களின் வீரமரணத்தை மறக்காது" எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தியும் புல்வாமா தாக்குதல் குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.
ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் " புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்எப் வீரர்கள் கொல்லப்பட்டதை இன்று நாம் நினைவுகூர்கிறோம். இப்போது சில கேள்விகளை முன்வைக்கிறேன். இந்த தாக்குதல் குறித்த விசாரணையில் என்ன கிடைத்தது?, இந்த தாக்குதலால் அதிகமாகப் பயனடைந்தது யார்? இந்த தாக்குதலுக்கு அனுமதித்த பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பாஜக அரசில் இதுவரை யார் பொறுப்பேற்றுள்ளது?" என கேள்வி எழுப்பியுள்ளார்.