

உத்தரபிரதேசத்தில் லாரி மீது பயணிகள் பஸ் மோதிய விபத்தில் 14 பேர் இறந்தனர். 25 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து பிஹாரின் மோதிஹாரி என்ற இடத்துக்கு நேற்று முன்தினம் இரவு பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் அருகே ஆக்ரா - லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் நாக்லா கனாகர் என்ற இடத்தில் சென்றபோது சாலை ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது வேகமாக வந்த பஸ் மோதியது. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 25 பேர் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் லக்னோ, இடாவா உட்பட உ.பியின் பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். லாரியின் டிரைவர், கிளீனர் ஆகியோரும் பலத்த காயமடைந்து இடாவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பஞ்சரான டயரை மாற்றுவதற்காக லாரியை சாலை ஓரமாக நிறுத்திவைத்திருந்தபோது பின்னால் வந்த பஸ், லாரி மீது வேகமாக மோதி விபத்து ஏற்பட்டதாக லாரி கிளீனர் தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
மோடி இரங்கல்: பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உத்தரபிரதேசத்தில் நடந்த சாலை விபத்து ஆழ்ந்த துயரமளிக்கிறது. பலர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்களை தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக வாழ்த்துகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.