

ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், மதுபானம் போன்றவற்றை வழங்குவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஆந்திர அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அமராவதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தகவல் தொடர்புத் துறை அமைச்சர் நானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தலை வரும் மார்ச் 15-ம் தேதிக்குள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் சில மாற்றங்களை செய்யவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், மதுபானம் போன்றவற்றை வழங்கும் வேட்பாளர்கள் கையும் களவுமாக பிடிபட்டால் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. தேர்தலில் வெற்றிக்கு பிறகு இந்த முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் பதவி பறிக்கப்படும். மேலும் இந்த குற்றங்களுக்கான சிறை தண்டனை தற்போது 3 முதல் 6 மாதங்கள் வரை உள்ளது. இனி இந்த குற்றங்களுக்கான தண்டனை 3 ஆண்டுகளாக உயர்த்தப்படும்.
பூக்கள், பழம் பயிரிடுவோர் மற்றும் தென்னை விவசாயிகள் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும்போது அவர்களுக்கான நிதியுதவி அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் நானி கூறினார்.