

கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை.
கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் கன்னடர்களுக்கு 90 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்து சரோஜினி மகிஷி குழு அறிக்கையை அமல்படுத்தக் கோரி கடந்த 100 நாட்களாக கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் மக்களின் இடப்பெயர்ச்சியை தடுக்க தனிச்சட்டம் இயற்றக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாகேஷ் தலைமையிலான கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டத்துக்கு 700-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்த நிலையில், தனியார் நிறுவனங்களுக்கும் வணிக வளாகங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனிடையே முதல்வர் எடியூரப்பா, “இந்தப் போராட்டம் தேவையற்றது. பள்ளி, கல்லூரிகளும் போக்குவரத்து கழகமும் வழக்கம் போல இயங்கும்'' என அறிவித்தார்.
இதையடுத்து, நேற்று கர்நாடகா முழுவதும் பேருந்து, ஆட்டோ, டாக்ஸி வழக்கம் போல இயங்கின. அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களும் இயங்கியதால் கடைகளும் அடைக்கப்படவில்லை. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. இதனிடையே, பெங்களூரு, மங்களூரு, மைசூரு உள்ளிட்ட இடங்களில் கன்னட அமைப்பினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், கன்னட கூட்டமைப்பின் தலைவர் நாகேஷ் தலைமையில் ஏராளமானோர் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து சுதந்திரப் பூங்கா வரை பேரணியாக சென்றனர். அப்போது கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரியும், வெளிமாநிலத்தவரின் இடப்பெயர்ச்சியை தடுக்கக் கோரியும் முழக்கம் எழுப்பினர்.
இதற்கிடையே, மங்களூருவில் இருந்து திருப்பதி சென்ற ஒரு பேருந்து ஃபாரங்கிபேட்டை அருகே சென்ற போது, கன்னட அமைப்பினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. ஓசூர் சாலையில் திறக்கப்பட்டிருந்த கடைகளை அடைக்கக் கோரி மிரட்டல் விடுத்த கன்னட அமைப்பினரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், கன்னட கூட்டமைப்பின் நிர்வாகிகள் நேற்று மாலை முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து, கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குமாறு மனு அளித்தனர். அப்போது எடியூரப்பா, “சரோஜினி மகஷி அறிக்கையை காங்கிரஸார்தான் கிடப்பில் போட்டனர். கடந்த முறை நான் முதல்வராக பொறுப்பேற்ற சமயத்திலேயே சிலவற்றை செயல்படுத்தியுள்ளேன். மீதமுள்ள சில பரிந்துரைகளும் உரிய முறையில் பரிசீலித்து நிறைவேற்றப்படும்'' என்றார்.