Last Updated : 14 Feb, 2020 09:41 AM

 

Published : 14 Feb 2020 09:41 AM
Last Updated : 14 Feb 2020 09:41 AM

இடஒதுக்கீடு குறித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கோரிக்கை

பெங்களூரு

அரசுப்பணி, பதவி உயர்வு ஆகியவற்றில் இடஒதுக்கீடு வழங்குவது அடிப்படை உரிமை அல்ல என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

அரசுப் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு பெறுவது அடிப்படை உரிமை அல்ல என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பு சமூக நீதிக்கு எதிராக உள்ளது. மேலும், இது அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இடஒதுக்கீடு என்பது கருணையோ, கொடையோ அல்ல. இதனை குடிமக்களின் அடிப்படை உரிமை என அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். நேரடி பணியமர்த்தல் இல்லாத நிலையில், பதவி உயர்வில் இடஒதுக்கீடு இருப்பது அவசியமாகும். எனவே, மத்திய அரசு உடனடியாக இவ்வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும். இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வே விசாரிக்க வேண்டும்.

இடஒதுக்கீட்டை நீக்க வேண்டும் என்பதே பாஜகவின் முக்கியமான நோக்கமாகும். அதனால்தான், அக்கட்சியை சேர்ந்தவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என பேசி வருகின்றனர். 70 ஆண்டுகளாக பின்பற்றப்படும் சமூகநீதியை குழிதோண்டி புதைக்க முயற்சி செய்வது தவறானது. இட ஒதுக்கீட்டை ரத்து செய்தால் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் காங்கிரஸ் தீவிரமாக போராடும்.

ப‌தவி உயர்வில் தலித், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் 117-வது சட்டத் திருத்தத்தை புதுப்பித்து, அதை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என நீதித்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதனை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x