Published : 13 Feb 2020 09:34 PM
Last Updated : 13 Feb 2020 09:34 PM

கர்நாடகா சாலை விபத்தில் இருவர் பலியானதற்கு  தாறுமாறான ட்ரைவிங் காரணமா? - அமைச்சர் மகனை போலீஸ் காப்பாற்றுவதாக காங்கிரஸ் கடும் சாடல்

கர்நாடகா வடக்குப் பகுதியான பெல்லாரி மாவட்டத்தில் சாலை விபத்தில் கார் மோதி இருவர் பலியான விவகாரத்தில் கர்நாடக வருவாய் அமைச்சரான ஆர்.அசோகாவின் மகன் ஷரத் காரை தாறுமாறாக ஓட்டி வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மெர்சிடஸ் காரை ஷரத் தாறுமாறாக அதிவேகத்தில் ஓட்டி வந்ததே இருவர் சாவுக்கும் காரணம் என்ற கடும் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் அமைச்சர் அசோகாவும், போலீஸாருமே அமைச்சர் மகனுக்குத் தொடர்பில்லை என்று விஷயத்தை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள் என்று காங்கிரஸ் தரப்பில் கடும் குற்றச்சாட்டு எழுந்தது.

காரில் பயணம் செய்தவர்கள் பெயர்கள் எஃப்.ஐ.ஆர். -ல் இடம்பெற அமைச்சர் மகன் ஷரத் பெயர் இடம்பெறவில்லை. சிகப்பு மெர்சிடஸ் பென்ஸ் கார் மோதி பலியானவர்களில் ஒருவர் ரவி நாயக் என்ற 19 வயது நபர் ஏழை விவசாயத் தொழிலாளியின் மகன். பலியான இன்னொருவர் காரில் பயணம் செய்த 27 வயது சச்சின் என்ற நபர், இவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இறந்து போனார்.

தன் மகன்மீது எழுந்துள்ள இந்தப் புகார் குறித்து வருவாய்த் துறை அமைச்சர் அசோகா கூறும்போது, “2 பேர் கொல்லப்பட்ட விபத்து குறித்து நானும் கேள்விப்பட்டேன். சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான், விசாரணையில் வழக்கு இருப்பதால் நான் இது தொடர்பாக பேசுவது முறையாகாது. எஃப்.ஐ.ஆர். ல் என் மகன் பெயர் இல்லை. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்று கூறினார்.

இந்த சிகப்பு மெர்சிடஸ் பென்ஸ் கென்கேரியில் உள்ள பப்ளிக் ஸ்கூல் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பள்ளி அமைச்சரின் குடும்பத்தினர் நடத்துவதாகும். விபத்து நடந்த அன்று ஹம்பியிலிருந்து கார் வந்து கொண்டிருந்தது. 'எனக்கும் பள்ளிக்கும் தொடர்பு உள்ளது, எனக்கும் காருக்கும் தொடர்பு இல்லை’ என்று அமைச்சர் அசோகா மறுத்தார்.

கர்நாடகா காங்கிரஸ் இது தொடர்பாகக் கூறும்போது, “அமைச்சர் அசோகாவின் மகனை காப்பாற்ற பெரிய சதி நடக்கிறது. விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே போலீஸார் அமைச்சர் மகன் ஷரத்துக்கு நற்சான்றிதழ் வழங்குகிறது. அமைச்சர் மகனின் பொறுப்பற்ற ட்ரைவிங்கினால் அப்பாவி பலியாகியுள்ளனர், இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். போலீஸார் முழுமையான விசாரணை நடத்த வேண்டும்” என்று கடுமையாகக் கண்டித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x