Published : 13 Feb 2020 08:49 PM
Last Updated : 13 Feb 2020 08:49 PM

படேலை அமைச்சரவையில் சேர்க்க நேரு விரும்பவில்லையா? - ஜெய்சங்கர் பதிவுக்கு எதிராக ஆதாரங்களை வெளியிட்ட ராமச்சந்திர குஹா, ஜெய்ராம் ரமேஷ்

வி.பி.மேனன் என்பவர் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலில் தான் படித்ததாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தன் ட்விட்டரில் பதிவிட்ட போது, முன்னாள் பிரதமர் மறைந்த ஜவஹர்லால் நேரு தன் அமைச்சரவையில் வல்லபாய் படேலை விரும்பவில்லை என்று தெரிவித்து புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பிவிட்டார்.

ஜெய்சங்கரின் இந்தப் பதிவை மறுத்து வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா மற்றும் காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் 1947-ல் நேரு எழுதிய கடிதங்களின் ஸ்க்ரீன் ஷாட்களை தங்கள் பதிவில் வெளியிட்டு அதில் தன் அமைச்சரவைப் பட்டியலில் படேல் பெயரை நேரு முதல் பெயராக பதிவிட்டதும் "அமைச்சரவையின் பலமான தூண்” என்று படேலை நேரு குறிப்பிட்டதையும் இவர்கள் வெளியிட்டு ஜெய்சங்கருக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

ஜெய்சங்கர் குறிப்பிட்ட அந்த நூல், நாராயணி பாசு எழுதிய, “வி.பி.மேனன்: நவீன இந்தியாவின் கொண்டாடப்படாத வடிவமைப்பாளர்” என்ற நூலாகும். மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்த நூல் அறிமுக விழாவுக்காக அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாராயணி பாசு, வி.பி.மேனனின் கொள்ளுப்பேத்தியாவார். சுதந்திரத்துக்குப் பிறகான தேசக்கட்டுமானத்தில் படேலுடன் இணைந்து பணியாற்றியவர் மேனன். இந்த நூலில் சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் வல்லபாய் படேலின் பெயர் இடம்பெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு வைசிராய் மவுண்ட் பேட்டனைச் சந்தித்த வி.பி.மேனன், அடுத்து யார் என்ற போரை நீங்கள் தொடங்கி விட்டீர்கள், காங்கிரஸ் இரண்டாக உடையும் என்று எச்சரித்ததாகவும் பிறகு மவுண்ட் பேட்டன், மகாத்மா காந்தியைச் சந்தித்த பிறகே படேல் பெயர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டதாகவும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தை வைத்து ஜெய்சங்கர் ட்வீட் செய்ய, ராமச்சந்திர குஹா, இதனை ‘பொய்’ என்று கூறி, “இந்தப் பொய்யை பேராசிரியர் ஸ்ரீநாத் ராகவன் அச்சில் உடைத்து நொறுக்கியுள்ளார். நவீன இந்தியாவைக் கட்டமைத்தவர்கள் இடையே போலிப் பகைமைகளையும் போலிச் செய்திகளையும் வளர்ப்பது வெளியுறவு அமைச்சரின் வேலையல்ல. இந்த வேலையை அவர் பாஜக-வின் ஐடி பிரிவுக்கு விட்டிருக்க வேண்டும்” என்றார்.

இந்த ட்வீட்டுக்கு பதில் ட்வீட் செய்த ஜெய்சங்கர், “சில வெளியுறவு அமைச்சர்களும் நூல்களை வாசிப்பார்கள், சில பேராசிரியர்களுக்கும் இது நல்ல பழக்கம்தான். இந்தச் சந்தர்ப்பத்தில் நான் நேற்று அறிமுகம் செய்த புத்தகத்தை பரிந்துரை செய்கிறேன்” என்று பதில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக விட்டுவிடாத ராமச்சந்திர குஹா, ஆகஸ்ட் 1, 1947-ல் நேரு எழுதிய கடிதத்தின் ஸ்க்ரீன் ஷாட்டை பதிவேற்றினார். அதில் படேலை அமைச்சரவைக்கு அழைத்ததும் அதில் ‘அமைச்சரவையின் வலுவான தூண்’ என்று படேலை நேரு குறிப்பிட்டதையும் குஹா பதிவேற்றம் செய்தார்.

படேல்தான் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர்.

இதனையடுத்து ஜெய்சங்கரை மேலும் விமர்சித்த குஹா, “ஐயா, நீங்கள் ஜே.என்.யு.வில் பி.எச்.டி பட்டம் பெற்றவர், எனவே என்னை விட அதிக புத்தகங்களை நீங்கள் வாசித்திருப்பீர்கள். அதில் நேருவுக்கும் படேலுக்கும் இடையிலான கடிதப்போக்குவரத்தும் இருக்கும், அதில் படேலை ‘வலுவான தூண்’ என்று கூறி அமைச்சரவையில் இடம்பெற நேரு விரும்பியதும் பதிவாகியிருக்கும். மீண்டும் அந்தப் புத்தகங்களை நீங்கள் வாசிக்க வேண்டும்” என்று பதிலடி கொடுத்தார்.

இந்த விவாதத்தில் பங்கேற்ற ஜெய்ராம் ரமேஷ், ஜூலை 19, 1947 முதல் ஆகஸ்ட் 14, 1947 வரை நேரு எழுதிய கடிதங்களை தொடர் ட்வீட்களில் வெளியிட்டு அதில் ஒவ்வொரு பட்டியலிலும் படேல் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் என்பதை வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x