Published : 13 Feb 2020 20:39 pm

Updated : 13 Feb 2020 20:39 pm

 

Published : 13 Feb 2020 08:39 PM
Last Updated : 13 Feb 2020 08:39 PM

'சுட்டுத்தள்ளுங்கள்', 'இந்தியா-பாக் போட்டி' என டெல்லி தேர்தலில் பாஜக தலைவர்கள் பேசியிருக்க கூடாது: தோல்விக்கு காரணம் கூறிய அமித் ஷா

bjp-leaders-shouldn-t-have-uttered-goli-maro-indo-pak-match-shah
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் சுட்டுத்தள்ளுங்கள், இந்தியா-பாக் போட்டி என்று பாஜக தலைவர்கள் பேசியிருக்கக்கூடாது, இதுபோன்ற பேச்சுக்குத்தான் கட்சி மிகப்பெரிய விலை கொடுக்க நேரிட்டுள்ளது என்று பாஜக முன்னாள் தேசியத் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கண்டித்துள்ளார்

டெல்லியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மிகட்சி 70 தொகுதிகளில் 62 இடங்களைப் பிடித்து 3-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. ஆனால், கடும் போட்டியளித்த பாஜக 8 இடங்களில் மட்டுமே வென்றது.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்கூர், தேச துரோகிகளைச் சுட்டுத்தள்ளுங்கள் என்று கூறியது, இந்தியா-பாகிஸ்தான் போட்டி என பாஜகவின் கபில் மிஸ்ரா பேசியது, பர்வேஷ் வர்மா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுத்துத் தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடைவிதித்து.

பாஜக தலைவர்கள் பர்வேஷ் வர்மா, அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா (இடமிருந்து)

ஏற்கனவே டெல்லியில் சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராகப் போராட்டம் வலுத்து வந்த நிலையில், பாஜக தலைவர்கள் பேசியது அந்த கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரை மேலும் சேதப்படுத்தியது. தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றி பெறும் என மூத்த தலைவர்களான அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் நம்பிய நிலையில் பெரும் தோல்வியாக அமைந்தது.

இந்த தோல்விக்கான காரணம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லியில் டைம்ஸ் நவ் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது வெளிப்படையாகக் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:
தேர்தலில் பாஜக வெற்றி தோல்விக்காக போட்டியிடவில்லை. ஆனால், தன்னுடைய சிந்தாந்தங்களை, கொள்கைகளை மக்களிடம் தேர்தல் மூலம் பரப்புவதை நம்புகிறது.

டெல்லி தேர்தலில் பாஜகவின் சில தலைவர்கள் மக்கள் மத்தியில் பேசும்போது, சுட்டுத்தள்ளுங்கள், இந்தியா-பாக் போட்டி எனப் பேசியிருக்கக்கூடாது. இதுபோன்ற கருத்துக்களைப் பேசி இருக்கக் கூடாது. சர்ச்சையான இந்த கருத்துக்களில் இருந்து பாஜக ஒதுங்கி இருந்திருக்க வேண்டும்.

இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பாஜக தலைவர்கள் பேசியதால்தான் தேர்தலில் நாம் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிட்டுள்ளது. தோல்விக்குக் காரணமாகவும் அமைந்தது. இதுபோன்ற பேச்சுக்களால்தான் நம்முடைய ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகிறது.

டெல்லி தேர்தல் குறித்த எனது கணிப்புகள் தவறாக அமைந்துவிட்டது. ஆனால், குடியுரிமைத் திருத்தச்சட்டம், தேசிய குடியுரிமைப் பதிவேட்டுக்கு எதிராக மக்கள் அளித்த தீர்ப்பாக தேர்தல் முடிவுகளை எடுக்க முடியாது.

குடியுரிமைத் திருத்தச்சட்டம் குறித்து யாரேனும் என்னுடன் விவாதிக்க தயார் என்றால், என் அலுவலகத்தில் நேரம் குறித்துக் கொள்ளுங்கள். நான் 3 நாட்கள் தருகிறேன்.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கவே சிஏஏ-யில் நடைமுறை இருக்கிறதே தவிர, யாருடைய குடியுரிமையையும் பறிக்க இடமில்லை.

மதத்தின் அடிப்படையில் யாரையும் நாங்கள் ஒருபோதும் பாகுபாடு பார்க்கமாட்டோம். முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்படும் என குடியுரிமைத் திருத்தச்சட்டத்தி்ல எந்த அம்சமும் இல்லை.

மேலோட்டமாக சிஏஏ திருத்தச்சட்டத்தை விமர்சிக்காதீர்கள், அதில் உள்ள நல்ல விஷயங்களை பேசுங்கள். முஸ்லிம்களுக்கு எதிரானதும், சிறுபான்மையினருக்கும் எதிரானதும் சிஏஏ அல்ல. சிஏஏ-வின் நல்ல அம்சங்கள் குறித்து யாருடனும் நான் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், துரதிர்ஷ்டம் யாரும் என்னுடன் சிஏஏ குறித்து விவாதிக்க முன்வருவதில்லை.

நாடுமுழுவதும் என்ஆர்சியை நடைமுறைப்படுத்த எந்த முடிவும் எடுக்கவில்லை. என்பிஆர் பதிவின்போது ஏதேனும் ஆவணங்களைக் காண்பிக்க யாருக்கேனும் விருப்பம் இல்லாவிட்டால், அவர்கள் கட்டாயப்படுத்தமாட்டார்கள். அவர்களுக்கு முழுச்சுதந்திரம் உண்டு.

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் என்ஆர்சி கொண்டுவருவோம் என உறுதியளித்துள்ளோம். சிஏஏக்கு எதிராக நடக்கும் போராட்டத்தை அமைதியான முறையில் நடத்த அனைவருக்கும் உரிமை உண்டு, ஆனால், வன்முறையை நியாயப்படுத்த முடியாது.. அஹிம்சை முறையிலான போராட்டத்தைப் பொறுத்துக்கொள்ளலாம், ஆனால், வன்முறையை ஏற்க முடியாது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தை எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் சுதந்திரமாகச் சென்று பார்க்க உரிமை உண்டு. யாருக்கும் எந்த கட்சிக்கும் தடை ஏதும் இல்லை.

மூன்று முன்னாள் முதல்வர்களான மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, பரூப் அப்துல்லா ஆகியோர் பொதுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அந்தமாநில நிர்வாகம் வீட்டுக்காவலில் வைத்துள்ளது அந்த நிர்வாகம் எடுத்த முடிவு.

இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்


BJP leaders shouldn’t have utteredGoli maroIndo-Pak matchUnion Home Minister Amit ShahBJP leadersDelhi Assembly electionsCampaigningபாஜக தலைவர்கள்அமித் ஷாசுட்டுத்தள்ளுங்கள்இந்தியா-பாக் போட்டி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like


More From This Category

More From this Author