Last Updated : 13 Feb, 2020 06:15 PM

 

Published : 13 Feb 2020 06:15 PM
Last Updated : 13 Feb 2020 06:15 PM

காங்கிரஸுக்கு கரோனா வைரஸ் போன்ற ஒரு தீர்க்கப்படாத பேரழிவு: ஜெய்ராம் ரமேஷ் பேட்டி

மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ். | கோப்புப் படம்

கொச்சி

டெல்லி தேர்தல் முடிவு காங்கிரஸுக்கு கரோனா வைரஸ் போன்ற ஒரு தீர்க்கப்படாத பேரழிவு என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நடைபெற்று வரும் சர்வதேச புத்தகக் காட்சியில் ஜெய்ராம் ரமேஷ் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''நாட்டில் சிறுபான்மை வகுப்புவாதத்தில் காங்கிரஸ் பிரச்சாரம் மென்மையாக உள்ளது. வகுப்புவாதத்தை எதிர்ப்பது என்று முடிவெடுத்தால் அது தேர்ந்தெடுக்கப்பட்டதாக இருக்கமுடியாது என்றே நான் கருதுகிறேன்.

ஷாஹீன் பாக் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை பாஜக எதிர்முனைக்குத் தள்ளியதைத்தான் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு காட்டுகிறது. குறுகிய காலத்தில் பாஜக வெற்றி பெறவில்லை. ஆனால், இதன் விளைவாக காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு பேரழிவு ஏற்பட்டது. இது காங்கிரஸுக்கு கரோனா வைரஸ் போன்ற ஒரு தீர்க்கப்படாத பேரழிவு.

உண்மையான மதச்சார்பின்மை அனைத்து வகையிலும் இயங்கும் அனைத்து இனவாதத்தையும் வலுவோடு எதிர்த்துப் போராடுவது ஆகும். இதில் சிறுபான்மையினரின் வகுப்புவாதமும் அடங்கும். இதில் நாம் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். நாம் யாருடைய எந்தவொரு மத உணர்விற்கும் இடையூறாக இருக்கக்கூடாது. அதுதான் உண்மையான மதச்சார்பின்மை.

நாம் அனைத்து வகையான வகுப்புவாதத்திற்கும் எதிராக தைரியமாகவும் ஆக்கிரமிப்புடனும் இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக பொதுமக்களில், சிறுபான்மை வகுப்புவாதத்தில் காங்கிரஸின் பிரச்சாரம் மென்மையாக உள்ளது. இது உண்மை. இந்தப் பிரச்சினையை நாம் தீர்க்க வேண்டும். நாம் நம்பக்கூடிய ஒரு கற்பனை உலகில் வாழ முடியாது. இதில் நாமும் விழித்தெழ வேண்டும்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.ஆண்டனி சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் நடந்த ஒரு விழாவில், ''காங்கிரஸ் கட்சி, பெரும்பான்மையினரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பவர்களாக இருப்பதைக் காண முடியவில்லை'' என்று குறிப்பிட்டார்.

வழக்கமாக ஆண்டனியின் கருத்துகளோடு நான் அரிதாகவே உடன்படுபவன். ஆனால், இப்படி அவர் கூறிய கருத்துக்கு நான் அவருடன் முற்றிலும் உடன்படுகிறேன்''.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை வகுப்புவாத அமைப்புகள் கடத்திச் சென்றதாக காங்கிரஸில் ஒரு சிந்தனை இருக்கிறதா என்ற கேள்விக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில் அளிக்கையில், ''இது சம்பந்தப்பட்ட சிலரின் எதிர்ப்பு. அவர்களுக்கு உண்மையான அச்சங்களும் கவலைகளும் உள்ளன. பின்னர், என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. இதை யார் கடத்திச் சென்றார்கள், எனக்குத் தெரியாது. சிஏஏ போராட்டம் தன் பாதையிலிருந்து முற்றிலும் விலகிவிட்டது.

ஒரு கட்டத்திற்கு அப்பால், அது அரசியல் சூழ்நிலையை முற்றிலுமாகத் தூண்டிவிட்டது. ஏனெனில் சிஏஏ யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்கிறார்கள். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியுரிமையை வழங்குகிறது.

இப்போது நான் சிஏஏவை எதிர்ப்பவனாக இருந்தாலும் ஆரம்பத்தில் இந்த சிஏஏ யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்றுதான் நான் முதலில் நினைத்திருந்தேன். இது மதத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியுரிமையை மட்டுமே வழங்குகிறது என்பதை அறிந்தபிறகு நான் அதை எதிர்க்கிறேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x